ஜனாதிபதி தேர்தல் – நுவரெலியா மாவட்டத்தில் 595,395 வாக்காளர்களின் எண்ணிக்கை பதிவு!

2024 செப்டம்பர் 21 ஆம் திகதியன்று நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்டு வாக்களிக்க உரித்தானவர்களின் எண்ணிக்கையை நுவரெலியா மாவட்ட செயலாளர் நந்தன கலபொட தெரிவித்தார்.

நாடளாவிய ரீதியில் 2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு இன்று (04) இடம்பெற்று வருகிறது அதற்கு அமைய நுவரெலியா மாவட்ட செயலகத்தின் தபால் மூல வாக்களிப்பு காலை ஆரம்பிக்கப்பட்டது.

நுவரெலியா மாவட்ட செயலகம், தேர்தல் அலுவலகம் மற்றும் மாவட்டத்தில் உள்ள அனைத்து பொலிஸ் நிலையங்களிலும் இன்று தபால் மூல வாக்களிப்பு அமைதியான முறையில் இடம்பெற்று வருகிறது.

 நுவரெலியா மாவட்டத்தில் உள்ள ஏனைய அரச நிறுவனங்களுக்கு எதிர்வரும் 5 மற்றும் 6 ஆம் திகதிகளில் வாக்களிப்பு நடைபெறவுள்ளதுடன் இவ் நாட்களில் வாக்களிப்பினை பயன்படுத்த முடியாதவர்களுக்கு எதிர்வரும் செப்டெம்பர் 11 மற்றும் 12 ஆம் திகதிகளில் மாவட்ட தேர்தல் காரியாலயத்தில் சந்தர்ப்பம் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மாவட்ட செயலாளர் தெரிவித்தார்.

இம்முறை நுவரெலியா மாவட்டத்தில் பதிவான மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 595,395 ஆகவும், நுவரெலியா தேர்தல் தொகுதியில் 341,563 வாக்குகளும், கொத்மலை தேர்தல் தொகுதியில்86,759 வாக்குகளும், ஹங்குராகெத்த தேர்தல் தொகுதியில் 77370 வாக்குகளும், வலப்பனை தேர்தல் தொகுதியில் 89703 வாக்குகளும் பதிவாகியுள்ளன.

நுவரெலியா மாவட்டத்தில் தபால் மூல வாக்குகளைப் பதிவு செய்வதற்கான அனைத்து ஏற்பாடுகளும் உரிய முறையில் மேற்கொள்ளப்பட்டு 19,747 வாக்காளர்கள் அஞ்சல் மூலம் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

நுவரெலியா மாவட்டத்தில் 200 வாக்களிப்பு நிலையங்கள் நிறுவப்பட்டுள்ளன. அதில் 120 உத்தியோகத்தர்கள் கண்காணிப்பிற்காகவும் அனுப்பப்பட்டுள்ளதாகவும் அத்துடன் பாதுகாப்பு ஏற்பாடுகளும் பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் நுவரெலியா மாவட்ட செயலாளர்  நந்தன கலபொட தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *