சிறுவர் உரிமைகளைப் பாதுகாக்க கோரி விழிப்புணர்வு நடைபவனியொன்று முல்லைத்தீவு சிலாவத்தை பிரதேசத்தில் நடைபெற்றது
சிறுவர்களை பாதுகாப்போம் எனும் தலைப்பில் கிது செவன திருச்சபையினர் குறித்த விழிப்புணர்வு பேரணியை நடத்தியிருந்தனர்
இன்று மாலை 4.00 மணியளவில் முல்லைத்தீவு தியோநகர் கிராமத்திலிருந்து ஆரம்பமான பேரணியானது சிலாவத்தை சந்தியை சென்றடைந்து நிறைவு பெற்றதை தொடர்ந்து சிறுவர்களை பாதுகாப்போம் எனும் தலைப்பில் வீதி நாடகமொன்றையும் நிகழ்த்தியிருந்தனர்.
சிறுவர் துஷ்பிரயோகத்தை கண்டால் 1929 க்கு அழைப்போம், குழந்தைகள் பாலியல் பொருட்கள் அல்ல, சிறுவர்களை தீய வார்த்தைகளால் பேசுவதை தடுப்போம், சிறுவர்களை மது போதை அடிமையிலிருந்து மீட்போம், வன்முறைகளில் இருந்து சிறுவர்களை நாம் பாதுகாப்போம் போன்ற பல்வேறு பதாதைகளை தாங்கியவாறு குறித்த விழிப்புணர்வு நடைபவனி இடம்பெற்றிருந்தது.
குறித்த பேரணியில் கிது செவன திருச்சபையினர், பெற்றோர்கள், சிறுவர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.