மலையகத்தை இனி காங்கிரஸ்தான் ஆளும், வேறு எவரும் இங்கு இருக்க முடியாது! – அமைச்சர் ஜீவன் சூளுரை

ஜெயிக்கிற பக்கத்தில் நிற்பது வீரம் கிடையாது. நிற்கும் பக்கத்தை ஜெயிக்க வைப்பதே உண்மையான வீரம் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார். 

செப்டம்பர் 21 ஆம் திகதி அதனை நாம் செய்துகாட்டுவோம். சவாலை ஏற்காது தப்பியோடிய தலைவர்கள் பக்கம் அல்ல, சவாலை ஏற்று மக்களை பாதுகாத்த தலைவர் பக்கமே நாம் நிற்கின்றோம்.

மலையகத்தை இனி காங்கிரஸ்தான் ஆளும், வேறு எவரும் இங்கு இருக்க முடியாது எனவும் அவர் கூறினார்.

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும், சுயேட்சை வேட்பாளரான ரணில் விக்கிரமசிங்கவை  ஆதரித்து, பூண்டுலோயா நகர மைதானத்தில் நேற்று மாலை மாபெரும் பிரசாரக் கூட்டம் நடைபெற்றது.

இந்நிகழ்வில் கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

தோட்டங்களை கிராமங்களாக்கும் திட்டம் வெற்றிகரமாக முன்னெடுக்கப்படும். அது தொடர்பில் அரசியல் நோக்கில் எதிரணிகளால் முன்னெடுக்கப்படும் பிரசாரங்களை மக்கள் நம்பக்கூடாது. 

இது விடயத்தில் மக்கள் சுயமாக சிந்தித்து பார்த்தால் உண்மை தெரியவரும். 

காணி உரிமைதான் பிரதான பிரச்சினை. ஆதனை வென்றெடுத்துவிட்டால் அனைவரும் வீடுகளை அமைக்கக்கூடிய சூழ்நிலை உருவாகும். 

எந்த அரசு ஆட்சிக்கு வந்தாலும் ஒரே வருடத்தில் வீட்டுப் பிரச்சினையை தீர்க்க முடியாது. ஆனால் காணி உரிமை கிடைத்துவிட்டால் நிச்சயம் மாற்றம் வரும்.

சலுகைகள்மூலம் அல்ல கல்வி உரிமையை வழங்குவதன்மூலம் மலையகத்தில் நாம் நிச்சயம் மாற்றத்தை ஏற்படுத்துவோம். 

சிலர் மலையகத்தின் பெருமையை பற்றி பேசாமல், வறுமையை பற்றி மட்டுமே பேசுகின்றனர். எமக்கும் அடையாளம் உள்ளது. 

அந்த அடையத்தை நாம் நிச்சயம் பாதுகாப்போம். நாம் நன்றி உணர்வு உள்ள சமூகம் என்ற அடிப்படையில் செப்டம்பர் 21 ஆம் திகதி ஜனாதிபதிக்கு ஆதரவு வழங்குவோம்.என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *