இலங்கையில் இன்று நடைபெறும் ஜனாதிபதி தேர்தல்!

இலங்கையில் இன்றையதினம் 9-வது ஜனாதிபதி தேர்தல் நடைபெறுகின்றது.

இன்று காலை 7 மணிக்கு ஆரம்பமாகி வாக்களிப்பு நடவடிக்கைகள் மாலை 4 மணி வரையில் இடம்பெறும்.

வாக்காளர்கள் அனைவரும் சரியான ஆவணங்களுடன் வாக்குச் சாவடிகளுக்குச் சென்று, உரிய நேரத்தில் தமது வாக்குகளைப் பதிவு செய்யுமாறு தேர்தல்கள் ஆணையாளர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்க 1 கோடியே 71 இலட்சத்து 40 ஆயிரத்து 352 பேர் தகுதி பெற்றுள்ளனர்.

நாடு பூராகவுமுள்ள 13,421 தேர்தல் மத்திய நிலையங்களில் வாக்களிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

மேலும் மாலை வாக்களிப்புக்கள் நிறைவடைந்ததும் வாக்கெண்ணும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அத்துடன் தேர்தல் நடவடிக்கைகளை முன்னிட்டு விஷேட பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

இம்முறை ஜனாதிபதி தேர்தலில் 39 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அதில், சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிடவிருந்த ஏ. மொஹமட் இல்யாஸ் ஆகஸ்ட் 22 ஆம் திகதி காலமானார்.

திடீர் சுகவீனம் காரணமாக புத்தளம் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த  மொஹமட் இல்யாஸ் தனது 78 ஆவது வயதிலேயே காலமானார்.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க அரசாங்கத்தின் போது யாழ். மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினராகவும் இவர் பணியாற்றியமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *