சமூக ஊடகங்களில் தகவல்களை பகிரும் போது நாட்டின் அனைத்து பிரஜைகளும் பொறுப்புணர்வுடன் செயற்பட வேண்டும் என முன்னாள் வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தின் முகநூலில் வெளியிடப்பட்ட பதிவில்,
வடக்கு மாகாணத்தின் கௌரவ ஆளுநர் பதவியில் இருந்து நேற்றைய தினம் (23/092024) பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்கள் இராஜிநாமா செய்தார்.
இந்நிலையில் சமூக ஊடகங்களிலும், இணையதளங்களிலும் பல்வேறு வதந்திகள் பகிரப்படுகின்றன. அந்த தகவல்களுக்கு பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்களின் நிழற்படத்தை முன்னிலைப்படுத்தி, அவரது இராஜிநாமா செய்தி இறுதியாக பதிவிடப்பட்டுள்ளது.
குறித்த செய்தியில் கௌரவ ஆளுநர் அவர்கள் இராஜிநாமா செய்துள்ளார் என்ற தகவல் மாத்திரமே பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்களுடன் தொடர்புடையது.
முன்னாள் ஆளுநர் ஒருவர் வெளிநாட்டிற்கு செல்ல முயற்சித்து, விமான நிலையத்தில் இருந்து திருப்பி அனுப்பியதாக கூறப்படும் விடயம் தொடர்பில், சம்பந்தப்பட்டவர்களின் தகவல்கள் தெளிவாகவும், உண்மையானதாகவும் பகிரப்பட வேண்டும்.
சமூக ஊடகங்களிலும், இணைய தளங்களிலும் தகவல்களை பகிரும் போது, செய்திக்கு பொருத்தமான நிழற்படங்களை பகிரவும். தேவையற்ற வதந்திகளை பகிராது இந்த நாட்டின் அனைத்து பிரஜைகளும் பொறுப்புணர்வுடன் செயற்பட வேண்டும் என்பதே அனைவரினதும் அவா எனவும் அதில் பதிவிடப்பட்டுள்ளது.