யாழில் ஒரு கோடிக்கும் மேற்பட்ட பணத்தினை கொள்ளையடித்த கொள்ளையர்களை 6 மணி நேரத்தில் கைது செய்துள்ளதாக யாழ்ப்பாணம் உதவி பொலிஸ் அத்தியேற்றகர் ஏ.எஸ்.ஜருள் தெரிவித்துள்ளார்.
புலம்பெயர் நாட்டிலிருந்து யாழ்ப்பாணம் வந்திருந்த ஒருவர் சேந்தாங்குளம் பகுதியில் உள்ள தனது காணியினை விற்பனை செய்துவிட்டு வீடு நோக்கி சென்று கொண்டிருந்த வேளை சண்டிலிப்பாய் பகுதியில் வைத்து ஒரு கோடி ஏழு லட்சம் ரூபாய் பணம் மற்றும் கைத்தொலைபேசி என்பன கொள்ளையடிக்கப்பட்டது.
இந்நிலையில் விரைந்து செயல்பட்ட பொலிசார் 6 மணி நேரத்தில் கொள்ளையர்களை கைது செய்தனர். குறித்த கைது நடவடிக்கை தொடர்பாக தெளிவுபடுத்தும் ஊடகவியலாளர் சந்திப்பு இன்றையதினம் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் நடைபெற்றது.
அங்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
குறித்த சம்பவமானது நேற்று பிற்பகல் 6:30 மணி அளவில் இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில் பாதிக்கப்பட்ட நபர் மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டினை பதிவு செய்துள்ளார்.
அந்த வகையில் இதுகுறித்து விசாரணைகளை மேற்கொள்வதற்கு வடக்கு மாகாண பிரதிப் பொலிஸ்மா அதிபர் திலக். சீ.ஏ.தனபால, யாழ்ப்பாண மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் காலிங்க ஜயசிங்க, யாழ்ப்பாண மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் லூசன் சூரியபண்டார ஆகியோர் என்னை நியமித்தனர்.
அந்தவகையில், நான் மானிப்பாய் பொலிஸ் நிலையத்திற்கு சென்று குறித்த சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டேன்.
அதன்பின்னர் யாழ்ப்பாண மாவட்ட பொலிஸ் குற்றத்தடுப்பு பொலிஸ் குழுவினர், சுன்னாகம் பொலிஸ் நிலைய பொறுப்பு அதிகாரி உள்ளடங்கலான குழுவினர், கோப்பாய் பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு குழுவினர், சாவகச்சேரி பொலிஸ் குற்றத்தடுப்பு குழுவினரை அழைத்து விசாரணைகளுக்காக நடவடிக்கைகளை மேற்கொண்டேன்.
ஒவ்வொரு பொலிஸ் குழுவினரும் ஒவ்வொரு திசைகளில் வெவ்வேறு வகையில் தகவல்களைப் பெற்று விசாரணைகளை மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அதன் பிரகாரம் இந்த கொள்ளை சம்பவத்தை திட்டமிட்டு நடாத்தியது காணிக்கு விற்பனை தரகராக செயல்பட்டவர் என்றும், அவரது மோட்டார் சைக்கிளிலேயே காணியை விற்பனை செய்தவர் பயணித்த வேளை சண்டிலிப்பாயில் இந்த சம்பவம் இடம்பெற்றமை தெரியவந்துள்ளது.
இந்நிலையில் குறிப்பிட்ட தரகரை கைது செய்து விசாரித்ததன் பிரகாரம் சம்பவம் நிகழ்ந்து 6 மணித்தியாலங்களுக்குள் கொள்ளையர்களை கைது செய்ய முடிந்தது.
இதன் போது ஒரு கோடி 5 லட்சம் ரூபாய் இலங்கை பணமும், இலங்கை பெறுமதியில் 2 லட்சம் பெறுமதியான வெளிநாட்டு நாணயங்களும், சம்பவத்திற்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிளும் கைப்பற்றப்பட்டது.
இந்தக் கைது நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு வழங்கிய அனைத்து பொலிசாருக்கும் எமது நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம்.
யாழ்ப்பாண மாவட்டத்தில் இவ்வாறான குற்றங்கள் பதிவாகின்ற போது நாங்கள் திறன்பட செயற்படுவதற்கு தயாராக இருக்கின்றோம். யாழ்ப்பாண மக்களுக்காக சேவை செய்வதற்கு கடமைப்பட்டுள்ளோம் என்றார்.