சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தினமான நேற்று, உலகத்தமிழர் இயக்கத்தால் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
குறித்த அறிக்கையில் ,
1 46 679 இது சாதாரணமாகக் கடந்து போகக் கூடிய வெறும் எண்ணிக்கையல்ல. ஈழத் தமிழரின் சரித்திர ஏட்டில் இரத்தக்கறை படிந்த பக்கங்கள். இந்தப் பெருநீள எண்ணிக்கையின் ஒவ்வொரு எண்ணும் ஒவ்வொரு தமிழனின் உயிர். 2009 திட்டமிட்ட தமிழினவழிப்புப் போரின் இறுதித் தருவாயில் டிசம்பர் 2008லிருந்து மே 2009 வரை ஆகக் குறைந்து 146 679 பேருக்கு என்ன ஆனது என்று 12 வருடங்கள் கழிந்தும் இன்றும் கூட விடையில்லை.
மறைந்த பேராயர் இராயப்பு யோசப்பு ஆண்டகை அவர்கள் உத்தியோக பூர்வமாக அனைத்துலக அரங்கில் நிறுவ முடிந்த எண்ணிக்கையிது. ஆனால் அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கம் போன்ற அமைப்புகளின் புள்ளிவிவரப்படி 1980 களிலிருந்து இலங்கையில் காணாமல் ஆக்கப்பட்டோர் 90 000 லிருந்து 110 000 வரை என்று குறைவாகவே கணக்குக் காட்டுகிறது. இது குறைந்த பட்சம் இரண்டு மடங்காகவே கணக்கெடுக்கப்பட வேண்டும். ஏனெனில் சம்மந்தப்பட்டவர்களின் உறவுகள் தங்கள் உயிர் பாதுகாப்புக் கருதி காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத் தேடி எங்கும் சென்று முறையிட முடிவதில்லை. அதிலும் பேரவலம் என்னவென்றால் எத்தனையோ தமிழர்கள் ஒட்டு மொத்ததமாய் அங்க அடையாளம் தெரியாமல் குடும்பம் குடும்பமாய் காணாமல் ஆக்கப்பட்டனர்.
உண்மையிலேயே தமிழின அழிப்பின் ஆரம்பத்திலிருந்து பார்க்கும் போது, இதுவரை அறியப்பட்ட எண்ணிக்கைகளிலிருந்து பல மடங்கு பெரியதான தொகையிலேயே எமது அவலங்கள் அளவிடப்பட வேண்டும்.
2009 முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு போரின் இறுதி நாட்களில் சிறீலங்கா இராணுவம் கேட்டதற்கிணங்க, தம் உறவுகளை உயிரோடு உத்தியோக பூர்வமாக கையொப்பமிட்டுக் கையளித்துவிட்டு பற்றுச்சீட்டை கையிலேயே வைத்துக் கொண்டு 12 வருடங்களாக இன்று வரை காவல் நிலையங்களிலும் நீதிமன்றங்களிலும் தங்களின் உறவுகள் எங்கே, அவர்களுக்கு என்ன நடந்தது என்று ஒவ்வொரு நாளும் ஈழத்திலே பரிதவித்துக் கொண்டிருக்கிறார்கள். சிங்கள பௌத்த பேரினவாத அரசால் எத்தனையோ வகையில் சிதைக்கப்பட்டு எத்தனையோ மனித உரிமை மீறல்களை அனுபவித்து வந்த தமிழினத்திற்கு பெரும் வலிகளில் ஒன்றாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் நிலை இன்றுவரை இருக்கின்றது.
கடந்த 40 வருடங்களாக நூற்றுக்கணக்கான உள்நாட்டு விசாரணைப் பொறிமுறைக்குள் எம்மைக் காலம் கடத்தி ஏமாற்றி வந்த சிறீலங்கா பயங்கரவாத அரசு இன்று காணாமல் ஆக்கப்பட்டோரை முதலைக்கு இரையாக்கினோம் என்றும் வெளிநாடுகளில் அவர்கள் சொகுசாக வாழ்கிறார்கள் எனவும் தமிழர்கள் மனதை மென்மேலும் புண்படுத்தி வருகிறது.
அது மட்டுமல்லாது அனைத்துலக சமூகத்தை ஏமாற்றும் வகையில் காணாமல் போனோர் அலுவலகம்(OMP) போன்ற உள்நாட்டு பொறிமுறையின் கையாலாகாத நிறுவனங்களில் தமிழினவழிப்பின் சூத்திரதாரிகளையே அதி உயர் பதவிகளில் அமர்த்தி அழகு பார்க்கிறது.
இவ்வாறாக இனவாத சிந்தனையை வெளிப்படுத்தும் வகையில் எதேச்சதிகாரப்போக்குடன் செயற்படும் சிறீலங்கா அரசினை ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புச் சபையூடாக அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்த நாம் களம் இறங்க வேண்டும். சட்டக்கோவை 15ன் அடிப்படையில் அங்கே ஒவ்வொரு காணாமல் ஆக்கப்பட்டோருக்கும் ஒவ்வொரு தனித்தனி வழக்கு பதிவு செய்யப்பட வேண்டும். இது போன்றே ஐ.நா வின் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான பிரத்தியேக ஆணையம் (Committee on Enforced Disappearance)செய்யப்படல் அவசியம். மேலும் பாதிக்கப்பட்ட தரப்பிற்கு ஒழுங்கமைக்கப்பட்ட முறையில் போதிய தொழில்நுட்ப வழிகாட்டல்களை (Technical Assistance) வழங்கி அவர்களின் போராட்டத்திற்கு வலுச் சேர்க்க அனைத்துலக சமூகம் முன்வர வேண்டும்.
அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தின் (ICC) சாசனத்தின் படி வலிந்து காணாமல் ஆக்கப்படுவதும் இனவழிப்பின் ஓர் அம்சமாகும். அந்தவகையில் எண்ணிலடங்கா உறவுகளைத் பறிகொடுத்து விட்டு சொல்லொண்னா துயரத்தோடு நீதி கேட்டு போராடிக்கொண்டிருக்கும் எம் உறவுகளின் நெடுந்துயரப்பாதையில் பன்னாட்டு அமைப்புக்களுடன் இணைந்து உலகத் தமிழர் இயக்கமாகிய நாம் ஐக்கியநாடுகள் பேரவை உற்பட பன்னாட்டு அரங்குகளில் எம்மாலான செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றோம்.
அதற்கு மேலும் வலுச்சேர்க்கும் வகையில் பாதிக்கப்பட்ட தமிழர் தரப்பாகிய நாம் பன்னாட்டு நீதிப் பொறிமுறைகளை முழு வீச்சாக செயற்படுத்தி எமக்கான நீதியை நிலைநாட்டுவதற்கு அனைத்துலக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் நாளான ஓகஸ்ட் 30 நெஞ்சில் உறுதியேற்று தமிழரின் நீதிக்கான செயற்பாடுகளை எவ்வித விட்டுக்கொடுப்புக்களும் இன்றி ஐ.நா வின் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான பிரத்தியேக ஆணையம் (Committee on Enforced Disappearances) போன்ற அனைத்துலகப் பொறிமுறைகளை சரியான முறையில் உள்வாங்கி தொடர்ச்சியான செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு கட்சிகள், அமைப்புகள் வேறுபாடின்றி சுய கௌரவம் பாராட்டாமல் இதயசுத்தியுடன் முன்வர வேண்டும். என தெரிவிக்கப்பட்டுள்ளது.





