மின் தகன நிலையத்தை அமைக்க அனைவரது ஒத்துழைப்பும் தேவை- மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர்

மன்னார் மாவட்டத்தில் மின் தகன நிலையம் ஒன்றை அமைக்க அனைவரது ஒத்துழைப்பும் தேவை என மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஏ.ஸ்ரான்லி டிமேல் தெரிவித்துள்ளார்.

இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் ஏ.ஸ்ரான்லி டிமேல் மேலும் கூறியுள்ளதாவது, “மன்னார் மாவட்டத்திலும் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.

இந்த நிலையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் உடலை, மின் தகனம் செய்வதற்கு  வவுனியாவிற்கு கொண்டு செல்கின்றோம்.

எனினும், தற்போதைய சூழ்நிலையில் சடலங்கள் அதிகரித்துள்ள நிலையில் ஏனைய மாவட்டங்களில் இருந்தும் சடலங்களை தகனம் செய்ய வவுனியாவிற்கு கொண்டு செல்லப்படுகின்றது.

இந்த நிலையில் வவுனியாவிலுள்ள மின் தகன இயந்திரத்தின் செயல்திறன் குறைவடைந்துள்ளதாக எமக்கு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும், தங்களின் முன் அனுமதி இன்றி சடலங்களை வவுனியா தகன நிலையத்திற்கு  கொண்டு வர வேண்டாம் என எங்களுக்கு தெரியப்படுத்தி உள்ளனர்.

இந்த நிலையில் மன்னார் மாவட்டத்தில் உடனடியாக மின் தகன நிலையத்தை  அமைக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

ஆகவே, அனைவரும் இந்த செயற்பாட்டுக்கு ஒத்துழைப்பு வழங்க முன்வர வேண்டும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *