அரசினதும் சிங்களக் கட்சிகளினதும் உண்மை முகத்தை இப்போதாவது புரிந்து, அவர்களோடு சேர்ந்து வரலாற்று துரோகங்களைப் புரிபவர்கள் தயவுசெய்து சரியான தடத்திற்குத் திரும்புங்கள் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் முக்கியஸ்தரும், சட்டத்தரணியுமான கனகரத்தினம் சுகாஷ் அவர்கள் தெரிவித்துள்ளார்.
காணாமலாக்கப்பட்டோர் தொடர்பில் காணாமல் போனமை எப்படி என்பதை ஆராய வேண்டாம் என ஜனாதிபதி வலியுறுத்தினார் என நிதியமைச்சர் தெரிவித்ததாக வெளியான பத்திரிக்கை செய்தியை மேற்கோள் காட்டியே அவர் இவ்வாறு தனது முகநூலில் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த முகநூல் பதிவில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது.
ஜனாதிபதியினதும் நீதி அமைச்சரினதும் அறிவிப்பை அடியோடு நிராகரிக்கின்றோம்!
சர்வதேச விசாரணை மூலம் காணாமலாக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கவேண்டும் என்பதோடு குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதே எமது உறுதியான மாறாத நிலைப்பாடு.
உள்ளக விசாரணையையும் காணாமலாக்கப்பட்டோருக்கான அலுவலகத்தையும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நிராகரித்தமை மிகச்சரியான முடிவென்பது மீண்டுமொருமுறை நிரூபிக்கப்பட்டுள்ளது.
அரசினதும் சிங்களக் கட்சிகளினதும் உண்மை முகத்தை இப்போதாவது புரிந்து, அவர்களோடு சேர்ந்து வரலாற்றுத் துரோகங்களைப் புரிபவர்கள் தயவுசெய்து சரியான தடத்திற்குத் திரும்புங்கள்.
அல்லது தமிழினத்தை அழித்தவர்களுக்குத் துணைபோனவர்கள் பட்டியலில் நிச்சயம் நீங்களும் வரலாற்றில் இடம்பெறுவீர்கள் என மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.





