
நாட்டில் அடுத்த சில தினங்களில் வாழ்க்கை செலவு மூன்று மடங்காக அதிகரிக்கலாம் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
உலகம் தற்போது மிகவும் பாரதூரமான விடயத்தை எதிர்நோக்க ஆரம்பித்துள்ளது. ரஷ்யா, உக்ரைன் மீது தாக்குதலை ஆரம்பித்ததே அந்த நிலைமை. இந்த நிலைமையானது உலகில் அனைத்து நாடுகளுக்கும் பொருளாதார, சமூக ரீதியாக ஓரளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.
இந்த நிலைமையில், குறிப்பாக ரஷ்யாவும் உக்ரைன் ஆகிய இரண்டு நாடுகளும் இலங்கையின் சிறந்த நட்பு நாடுகள். இப்படியான சூழ்நிலையில், இரண்டு நாடுகளுக்கும் இடையிலான இலங்கையின் உறவுகள் போர் நிலைமையால் பாதிக்கப்படலாம்.
இந் நிலைமையில், எமது உற்பத்திகள் குறிப்பாக தேயிலை ஏற்றுமதியில் பிரச்சினைகள் உருவாகலாம். ரஷ்யா அதிகளவில் எம்மிடம் தேயிலை கொள்வனவு செய்து எமக்கு உதவும் நாடு.
பல வகையில் ரஷ்யா, இலங்கைக்கு உதவி வருகிறது. உக்ரைனும் இப்படி பல வகையில் உதவி வழங்கியுள்ளது. இதனால், இந்த இரண்டு நாடுகளுக்கும் இடையிலான பிரச்சினை இலங்கையை மேலும் நெருக்கடிக்குள் தள்ளும் என்பது நிச்சயம்.
உலகத்தை எடுத்துக்கொண்டாலும் நிச்சயமற்ற நிலைமை. இந்த நிலைமை மற்றுமொரு போரை நோக்கி இட்டுச் செல்லுமா என்பது பிரச்சினைக்குரியது.
ரஷ்யா, உக்ரைன் பிரச்சினையுடன் டொலர் பிரச்சினை ஏற்பட்டு, பொருளாதாரம் சீர்குலைந்தால், அடுத்த சில நாட்களில் வாழ்க்கை செலவு இரண்டு மூன்று மடங்கு அதிகரிக்கும்.
மீண்டும் உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரித்துள்ளது. எரிவாயு விலையும் அதிகரிக்கும். டொலர் பற்றாக்குறை மேலும் அதிகரிக்கும்.
இந்த அனைத்து நெருக்கடிகளும் ஏற்படும் போது, அது நாட்டுக்கு பெரும் பாதிப்பை உருவாக்கும். இவை நாம் உருவாக்கிக்கொண்ட பிரச்சினைகள் அல்ல. ரஷ்யாவையும் உக்ரைனையும் நாம் சண்டையிட்டு கொள்ளுமாறு கூறவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.