மட்டக்களப்பில் தினமும் 300 பேருக்கு மேற்பட்ட தொற்றாளர்கள்

மட்டக்களப்பில் சராசரியாக புதிய தொற்றாளர்களாக 300 பேருக்கு மேற்பட்டவர்கள் இனங்காணப்படுவதோடு, சராசரியாக ஐந்துக்கு மேற்பட்ட மரணங்களும் சம்பவித்து வருகின்றன என மட்டக்களப்பு பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் என்.மயூரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பின் கொவிட் நிலைமைகள் தொடர்பில் இன்றைய தினம் இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 24 மணித்தியாலத்துள் 257 கொவிட் 19 தொற்றுநோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அத்துடன், இருவர் மரணமடைந்துள்ளனர். தொற்றுக்குள்ளானவர்கள் மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 75 பேரும், களுவாஞ்சிக்குடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 78 பேரும், வெல்லாவெளி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 41 பேரும், பட்டிப்பளை, வவுணதீவு, ஆரையம்பதி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் தலா 10 பேரும், காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 08 பேரும், கோரளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 02, வாழைச்சேனை, வாகரை, கிரான் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் இருந்து தலா ஒருவரும் அடையாளளம் காணபப்பட்டுள்ளனர். அத்துடன், மரணமடைந்தவர்களில் ஒருவர் காத்தான்குடி, மற்றையவர் வவுணதீவு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளைச் சேர்ந்தவர்களாவர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் இதுவரை மொத்தமாக 223 கொவிட் 19 மரணங்கள் நிகழ்ந்துள்ளன. அவர்களில் 20 வயதுக்குட்பட்ட எவரும் மரணிக்கவில்லை. 20 தொடக்கம் 40 வயதுக்குட்பட்ட 09 பேரும், 40 தொடக்கம் 60 வயதுக்குட்பட்ட 66 பேரும், 60 வயதுக்கு மேற்பட்ட 147 பேரும் மரணமடைந்துள்ளனர். மரணமடைந்தவர்களில் 53 வீதமானவர்கள் ஆண்களேயாவர்.

கடந்த வாரம் 1893 கொவிட் 19 தொற்று நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அத்துடன், 39 பேர் மரணமடைந்துள்ளனர். மட்டக்களப்பில் சராசரியாக புதிய தொற்றாளர்களாக 300 பேருக்கு மேற்பட்டவர்கள் இனங்காணப்படுவதோடு, சராசரியாக ஐந்துக்கு மேற்பட்ட மரணங்களும் சம்பவித்து வருகின்றன.

மட்டக்களப்பில் முதலாவது தடுப்பூசி சுமார் 270000 பேர் வரையில் வழங்கப்பட்டுள்ளது. இது முப்பது வயதுக்கு மேற்பட்ட 93 வீதமானவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இரண்டாவது தடுப்பூசி சுமார் 113000 வரையில் வழங்கப்பட்டுள்ளது. இது 39 வீதமானவர்களுக்கு இதுவரை வழங்கப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையில் கொவிட் அதிதீவிர சிகிச்சைப் பிரிவு 06 கட்டில்களுடன் கூடியதாக திறந்து வைக்கப்பட்டுள்ளது. இதில் நான்கு வென்டிலேட்டர்கள் உட்பட ஆறு நோயாளிகளுக்கு ஒரே நேரத்தில் சிகிச்சை அளிக்க முடியும். இதற்கு முன்னதாக சில மாதங்களுக்கு முன்பு காத்தான்குடி வைத்தியசாலையிலும் 06 கட்டில்களுடன் கூடியதாக அதிதீவிர சிகிச்சைப் பிரிவு ஆரம்பித்து வைக்கப்பட்டது. இதற்கு முன்னதாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் மாத்திரமே அதிதீவிர சிகிச்சைப் பிரிவு இயங்கி வந்தது. அத்துடன் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் 08 கட்டில்களுடன் கூடிய அதிதீவிர சிகிச்சைப் பிரிவு திறந்து வைக்கப்படவுள்ளது.

மக்களாகிய நீங்கள் தற்போதைய முடக்க நிலையில் வெளியில் செல்லாமல் வீட்டிலேயே இருப்பதன் மூலம் கொவிட் தொற்றினை மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து முற்றாகக் குறைத்துக் கொள்ள முடியும். அதன்படி சுகாதார நடைமுறைகளை மேலும் இறுக்கமாகப் பின்பற்றுங்கள் என்று தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *