யாழ்ப்பாணத்தில் உள்ள பனை அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக ஊழல் மோசடி நிறைந்த ஒருவரை நியமித்துள்ளமையானது ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்கவின் ஊழலற்ற தேசம் என்ற நிலைப்பாட்டை கேள்விக்குறியாக்கியுள்ளது .
என ஈ.பி.டி.பியின் ஊடக பேச்சாளரும் நாடாளுமன்ற தேர்தல் வேட்பாளருமான ஐயாத்துரை சிறீரங்கேஸ்வரன் சுட்டிக்காட்டியுள்ளார்.
யாழ்ப்பாணம் ஊடக அமையத்தில் இன்று (05) நடைபெற்ற ஊடக சந்திப்பில் இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகையில் ,
தற்போதைய ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்க ஊழலை ஒழிப்போம் ஊழல் வாதிகளுக்கு தமது அரசில் எந்தவொரு இடத்திலும் பதவி நிலை வழங்கப்படாது என கருத்தை முன்வைத்தே ஆட்சி அதிகாரத்தை பெற்றுக்கொண்டார்.
இந்நிலையில் தற்போது யாழ்ப்பாணத்தில் உள்ள பனை அதிகார சபையின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளவர் தனியார் நிறுவனங்களில் பதவிநிலை வகித்து பல்வேறு வகைகளில் பல கோடிகளை ஊழல் மோசடிகளை செய்தவர் என கூறப்படுகின்றது. இவை கடந்தகாலஙகளில் சமூக ஊடகங்களிலும் வெளியாகியிருந்தன.
அந்தவகையில் இவ்வாறான ஒரு மோசடி மிக்க நபரை பனை அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக நியமித்தமையானது ஜனாதிபதி அனுரவின் கருத்தை அல்லது அவரது நிலைப்பாட்டை கேள்விக்குறியாக்கியுள்ளதுடன் அவருக்கு வாக்களித்த மக்களையும் விசனமடைய செய்துள்ளது. குறிப்பாக பனைசார் உற்பத்தி தொழிலை முன்னெடுக்கும் மக்களை பெரும் சங்கடத்துக்கும் உள்ளாக்கியுள்ளது.
அத்துடன் அத்துறை சார்ந்தவர்களின் உழைப்பும் முதலீடுகளும் கேள்விக்குறியாக இருந்துவரும் நிலையில் இந்த நியமனத்தால் மேலும் பாதிப்பை எதிர்கொள்ளவுள்ளது.
அத்துடன் இவ்வாறான நியமனம் அந்த மக்களை மேலும் மன ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் பாதிக்கு வகையில் அமையும் என சுட்டிக்காட்டிய அவர் இது தொடர்பில் ஜனாதிபதி அவதானம் செலுத்த வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.