என் பெயரைத் தவிர்த்து முடிந்தால் பிரசாரம் செய்யுங்கள் பார்க்கலாம் – சுமந்திரன் பகிரங்க சவால்

“தேர்தல் பிரசார மேடைகளில் எம்.ஏ.சுமந்திரனின் பெயரைத் தவிர்த்து முடிந்தால் உங்களது தேர்தல் பரப்புரைகளைச் செய்யுங்கள் பார்க்கலாம்.” – இவ்வாறு கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினருக்குச் சவால் விடுத்துள்ளார் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பேச்சாளரும் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்ட வேட்பாளருமான எம்.ஏ.சுமந்திரன்.    

யாழ். வடமராட்சி ஊடக இல்லத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இந்தச் சவாலை விடுத்துள்ளார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உடைத்து முதலில் வெளியேறியவர்கள் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர்தான்.

2010 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில், தமிழ் மக்களைக் கொன்றழித்த சரத் பொன்சேகாவுக்கு ஆதரவளித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீர்மானம் எடுத்தபோது மேடையில் ஒன்றாக இருந்தவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம். அதன் பின்னர் நாடாளுமன்றத் தேர்தலின்போது ஆசனப் பங்கீட்டால்  ஏற்பட்ட முரண்பாட்டால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை விட்டு அவர் வெளியேறினார்.

ஆசனம் கிடைக்காததால் சைக்கிள் எடுத்து ஓடிவிட்டு இன்று வரை நாட்டில் நடப்பது எல்லாவற்றுக்கும் தமிழரசுக் கட்சிதான் காரணம் என்று வெற்று அரசியல் நாடகம் போட்டு வருகின்றனர் கஜேந்திரகுமார் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர்.

உங்கள் கட்சியிள் இருக்கும் ஓட்டைகளைப் பார்க்க ஆளில்லை. நீங்கள் தமிழரசுக் கட்சி உடைந்து விட்டதாகக் கண்ணீர் வடிக்கின்றீர்கள்.

கடந்த முறை உங்களை நாடாளுமன்றத்துக்கு அனுப்பி வைத்த மணிவண்ணனுக்கு நீங்கள் என்ன செய்தீர்கள்? இந்த முறையும் நீங்கள் இரண்டு குழுக்களாகப் பிரிந்து வாக்குக் கேட்பது எங்கள் கண்ணுக்குத் தெரியாமல் இல்லை.

நீங்கள் உங்களைப் பார்த்துக்கொள்ளுங்கள். மக்கள் உங்களுக்குக் கொடுத்த சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் என்ற பணியைச் செய்தீர்களா என்பதற்கு மக்களுக்குப் பதில் சொல்லுங்கள். தொடர்ந்து தமிழரசுக் கட்சியை விமர்சிப்பதை அரசியல் மூலதனமாக்குவது பலிக்காது என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.

இணைந்த வடக்கு – கிழக்குத் தேசமென முழங்கும் நீங்கள் கடந்த தடவை கிடைத்த போனஸ் ஆசனத்தைக் கிழக்குக் கொடுத்தீர்களா? நீங்கள் அதைத்  தேர்தலில் தோற்ற உங்கள் கஜேந்திரனுக்குக் கொடுத்து விட்டு வடக்கு – கிழக்கு இணைப்பு எனப் படம் போடுகிறீர்கள்.  

கிழக்கில் அவ்வளவு கரிசனையென்றால் நீங்கள் கிழக்குக்கு அந்த நாடாளுமன்றப் பிரதிநிதித்துவத்தைக் கொடுத்திருப்பீர்கள்.

உங்களுக்குக் கிழக்கில் கரிசனையில்லை. வாயளவில், தேர்தல் காலங்களில் ‘வவுனியாவில் நிலம் பறிபோகின்றது, மட்டக்களப்பில் நிலம் பறிபோகின்றது’ என்கிறீர்கள்.

குருந்தூர்மலை, வெடுக்குநாரிமலை, கிண்ணியா என்று ஒரு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி சட்டத்தரணி கதை அளக்கின்றார்.

மக்களது வெகுஜனப் போராட்டங்களோடு, அத்தனை நிலங்களையும் வழக்கு வைத்துப் பாதுகாப்பது நாங்கள். வகுப்பெடுத்தவர் ஒரு சட்டத்தரணி. அவரை நான் இவை தொடர்பில் ஒரு நீதிமன்றப் பக்கமும் கண்டதில்லை. வழக்காடி வெல்வது நாங்கள். போராடுவது மக்கள். படமெடுத்து பேஸ்புக்கில் போடுவது நீங்கள்.

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலை அடுத்து தேசிய அரசு அமைந்தால் அரசுக்கு ஆதரவளிப்போம். ஆனால், நல்லாட்சி போன்று எதிர்க்கட்சி வரிசையிலேயே அமர்வோம்.

சார்ள்ஸ் நிர்மலநாதன் பார் பெர்மிட்டுக்குக் கடிதம் கொடுத்தது உண்மையே. அந்த கடிதத்தை ஒழித்து வைத்துவிட்டு இப்போது முடிந்தால் காட்டுங்கள் பார்ப்போம் என்று அவர் சவால் விடுகின்றார். அத்தோடு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடும் செய்துள்ளார். அவரால் ஒன்றும் செய்ய முடியாது. பார் பெர்மிட் விவகாரத்தாலேயே அவர் தேர்தலில் இருந்து தானாக வெளியேறினார். விக்னேஸ்வரனும் போட்டியிடாது வெளியேறினார்.

அதேபோல் வேறு சிலரும் உள்ளே இருக்கின்றார்கள். அவர்களும் தாமாக வெளியேறினால் நல்லது.” – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *