முறிகண்டி உள்ளிட்ட பிரதேசத்தின் நிர்வாக கட்டமைப்பை கிளிநொச்சியுடன் இணையுங்கள்

முறிகண்டி உள்ளிட்ட பிரதேசத்தின் நிர்வாக கட்டமைப்பை கிளிநொச்சியுடன் இணையுங்கள் என மக்கள் விடுதலை முன்னணி கோரிக்கை விடுத்துள்ளது.

மேலும் அக்கட்சியின் கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்ட அமைப்பாளர்களால் கிளிநொச்சி அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு குறிப்பிடப்பட்டது.

இதன் போது கருத்து தெரிவித்த அக்கட்சியின் கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்ட அமைப்பாளர்களில் ஒருவரான கணேசபிள்ளை கருத்து தெரிவிக்கையில்,

அத்தோடு முறிகண்டி பிரதேசத்தில் இறக்கும் மக்களின் உடல்களை கொவிட் பரிசோதனைக்காக முல்லைத்தீவு மாஞ்சோலை வைத்தியசாலைக்கு அனுப்ப கட்டாயப்படுத்தப்படுகின்றனர்.

மேலும் அதற்கான வசதிகளை அவர்கள் செய்து கொடுப்பதும் இல்லை. அப்பகுதி மக்கள் வறுமையில் உள்ள நிலையில் மிகவும் பாதிக்கப்படுகின்றனர்.

செல்வதற்கு 58 கிலோமீட்டர் பயணிக்க வேண்டியதுடன், அதேயளவு தூரம் திரும்பவும் வேண்டி உள்ளது. இதற்கான போக்குவரத்து செலவு தூரத்துக்கு அமைவாக அதிகம் செலவாகின்றது.

அங்கு முடிவுகளை பெற்று சடலத்தை கொண்டு வரும் வரை 3 நாட்கள் நிற்க வேண்டும். அங்கு நிற்பதற்கு இடங்களும் இல்லை என்பதுடன் கடை வசதிகளும் இல்லை.

தற்பொழுது இருக்கும் சூழலில் பொருளாதார நிலையில் இருக்கின்ற பணத்தையும் செலவழித்து பெரும் துன்பங்களை அப்பகுதி மக்கள் எதிர் கொள்கின்றனர்.

இதனை தவிர்ப்பதற்கு மாங்குளம் வைத்தியசாலையை பலப்படுத்தி அங்கு PCR பரிசோதனையை மேற்கொள்ள இந்த அரசாங்கத்தின் ஊடாக சுகாதார தரப்பினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். அது அந்த மக்களிற்கு சடலங்களை வைத்தெடுக்க இலகுவாக இருக்கும்.

அல்லது, முறிகண்டி பிரதேசத்தை கிளிநொச்சி மாவட்டத்துடன் இணைத்துவிட வேண்டும். இதில் ஒன்றை மேற்கொண்டால் அப்பகுதி மக்களிற்கு இலகுவானதாக இருக்கும்.

நுகர்வு, பாடசாலை மற்றும் வைத்தியசாலை உள்ளிட்ட தேவைகளிற்கு கிளிநொச்சிக்கே செல்கின்றோம். ஆனால் நிர்வாக செயற்பாடுகளிற்காக முல்லைத்தீவு கச்சேரிக்கும், ஒட்டுசுட்டான் பிரதேச செயலகத்திற்கும் இறப்புக்கள் நடந்தால் இவ்வாறு வைத்தியசாலைக்கும் செல்லவேண்டி உள்ளது.

தற்பொழுது உள்ள சூழலில் வைத்தியர்கள், சுகாதார தரப்பினர் செய்யும் பணிகளிற்கு நன்றி சொல்கின்றோம்.

இவ்வாறான நிலையில் அண்மையில் இறந்த குமரன் கோபால் என்பவரை முல்லைத்தீவு மாஞ்சோலை வைத்தியசாலையில் 3 நாள் பரிசோதனை முடிவுக்காக வைத்திருந்துவிட்டு, உடலத்தை பாரமெடுத்து செல்லுமாறு உறவினர்களுக்கு அறிவித்தல் விடுக்கின்றனர்.

காலை சென்ற குடும்பத்தினரிடம் 11 மணி வரை மரண விசாரணைகள் இடம்பெற்று சடலத்தை குடும்பத்தினர் பாரமெடுக்க சென்ற போது சடலம் மாறியுள்ளது. குறித்த நபரின் சடலத்துக்கு மாறாக கொவிட் தொற்றாளர் ஒருவரின் சடலமே அங்கு காணப்பட்டது.

இவ்வாறான தவறுகளை சாதாரணமாக விட முடியாது. குறித்த சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு இழப்பீடு வழங்கப்பட வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *