ராஜபக்ஷகளுக்கு மாற்றீடான இனவாதக் கூட்டமே ஜே.வி.பி.- யாழில் ராஜிதவின் மகன் விளாசல்!

ராஜபக்ஷகளுக்கு மாற்றீடாகவே மற்றுமொரு இனவாதக் கூட்டமான ஜே.வி.பியினர் ‘தேசிய மக்கள் சக்தி’ எனக் கூறி ஆட்சிக்கு வந்துள்ளனர் என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சத்துர சேனாரத்ன தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பிரசாரக் கூட்டம் யாழ்ப்பாணம் – கோப்பாய் பகுதியில் நேற்று புதன்கிழமை இடம்பெற்றது. இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“தெற்கில் சுமார் 76 வருட பாரம்பரியத்தைக் கொண்ட கட்சிகள் இன்று சுக்குநூறாகியுள்ளன. அந்த மாற்றம் வடக்கிலும் வர வேண்டும். அந்த மாற்றத்துக்காகவே இளையோர்களான சுலக்சன் தலைமையிலான குழுவினர் களமிறங்கியுள்ளனர். அவர்களுக்கு நாங்கள் கரம் கொடுக்கவே வந்துள்ளோம்.

யுத்தம் நிறைவடைந்த பின்னர் மஹிந்த ராஜபக்ஷ காலத்திலும், கோட்டாபய ராஜபக்ஷ காலத்திலும் வடக்கில் அராஜகங்கள் நடைபெற்றன. பலர் காணாமல் ஆக்கப்பட்டனர். படுகொலை செய்யப்பட்டனர். ஊடகவியலாளர்கள் கூட காணாமல் ஆக்கப்பட்டும், படுகொலை செய்யப்பட்டும் உள்ளனர்.

அவ்வாறு வடக்கிலே அராஜகங்கள் நடைபெற்றபோது தெற்கிலே நாங்கள் குரல் கொடுத்தோம். ஐக்கிய சுதந்திர முன்னணி தமிழ் மக்களுக்காக அன்று தொடக்கம் குரல் கொடுத்தே வருகின்றது.

இனவாதத்தை மூலதனமாகக் கொண்டே ராஜபக்ஷக்கள் ஆட்சி செய்தனர். அவர்களுக்குப் பல அரசியல்வாதிகள் ஆதரவாகச் செயற்பட்டனர். அப்போது நாங்கள் தமிழ் மக்களுக்காகவும் முழு நாட்டுக்காகவும் போராடி மஹிந்த கும்பலைத் துரத்தினோம்.

கடந்த 2015ஆம் ஆண்டு மஹிந்த கும்பலை விரட்டி நல்லதொரு ஆட்சியை அமைத்தோம். அந்தக் காலப் பகுதியிலே தமிழ் மக்கள் ஓரளவு சுதந்திரக் காற்றை சுவாசித்தர்கள். பின்னர் புலிகள் மீள் உருவாகின்றார்கள் எனவும், முஸ்லிம் மக்களுக்கு எதிராகவும் கருத்துக்களை கூறி மீண்டும் இனவாதத்தைக் கொண்டு கோட்டாபய ராஜபக்ஷ ஆட்சி வந்தது.

மீண்டும் நாங்கள் போராடினோம். ராஜபக்ஷ கும்பலுக்குச் சாவு மணி அடிப்பது போல் வெற்றி கொண்டோம். அதனால்தான் தற்போது ராஜபக்ஷக்கள் தேர்தல் அரசியலில் இருந்து விலகி இருக்கின்றனர்.

வடக்கில் துப்பாக்கி முனைகளுக்குள் இருந்தும் பலர் நல்லிணக்கத்துக்காகக் குரல் கொடுத்தார்கள். அவர்களுடன் இணைந்தே இனவாதப் பேய்களை எம்மால் விரட்ட முடிந்தது.

தெற்கில் உள்ள பெரிய கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சி சுக்குநூறாகி விட்டது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைக் காணவில்லை. மொட்டுக் கட்சி உடைந்து விட்டது. ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து உடைந்து வந்த ஐக்கிய மக்கள் சக்தியும் இந்த நாடாளுமன்றத் தேர்தலுடன் காணாமல்போய்விடும். நாட்டை நாசமாக்கிய ஜே.வி.பியினரே தேசிய மக்கள் சக்தி எனவும், மாற்றம் எனவும் கூறி ஆட்சி அமைத்துள்ளார்கள்.

தமிழ் மக்களுக்குத் தீர்வு வழங்கப்பட வேண்டும் என 13ஆம் திருத்தத்தை ஆதரித்தவர்களைப் படுகொலை செய்தவர்களே ஜே.பி.வியினர். அவர்கள் தற்போது 13 ஐத் தாண்டியும் செல்வோம் எனத் தமிழ் மக்களுக்கு உறுதி அளிக்கின்றார்கள். ராஜபக்ஷக்களுக்கு மாற்றீடாகவே மற்றுமொரு இனவாதக் கூட்டமான ஜே.வி.பியினர் ஆட்சிக்கு வந்துள்ளனர். கடந்த காலங்களில் தோற்கடிக்கவே முடியாது என இருந்தவர்களைத் தற்போது துரத்தி அடித்துள்ளோம்.

தமிழ் மக்களுக்கான உரிமைக்காகத் தெற்கு மக்களையும் ஒன்றிணைத்து நாங்கள் போராடுவோம். கடந்த காலங்களில் துப்பாக்கி முனைகளுக்கு மத்தியிலும் போராடினோம். தமிழ் மக்களுக்காகக் குரல் கொடுத்தமைக்காக எனது தந்தையாரான ராஜித சேனாரத்ன மீது குண்டு வீச்சுத் தாக்குதல் கூட நடத்தப்பட்டது.

எதற்கும் நாங்கள் அஞ்சப் போவதில்லை. வடக்குக்கு நாங்கள் இப்போது வரவில்லை. சமாதான கால பகுதியில் வந்தோம். யுத்தம் முடிந்ததற்குப்  பின்னர், இடம்பெயர்ந்து இருந்த மக்களுக்குச் சுகாதார வசதிகளைச் செய்து கொடுத்தோம். யாழ். தேர்தல் மாவட்டத்தில் எமது கட்சியான ஐக்கிய தேசிய சுதந்திர முன்னணியில் முதன்மை வேட்பாளராகப் போட்டியிடும் சுலக்சன், சக வேட்பாளரான விஜயகாந்த் உள்ளிட்டவர்களுக்கு வாக்களிக்க வேண்டும்.

அஹிம்சாவாதி காந்தியின் கண்ணாடிச் சின்னத்துக்குத் தமிழ் மக்கள் வாக்களித்து அவர்களை நாடாளுமன்ற அனுப்ப வேண்டும். வடக்கில் இருந்து அவர்கள் வரும்போது , தெற்கில் நாம் அவர்களுடன் இணைந்து செயற்படத் தயாராகவே உள்ளோம்.” – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *