நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடவடிக்கை இன்று மாலை 4 மணியளவில் நிறைவடைந்ததையடுத்து வாக்குப்பெட்டிகள் தற்போது வாக்கெண்ணும் மத்திய நிலையங்களுக்கு கொண்டுவரப்படும் நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன.
அந்தவகையில் யாழ் மாவட்டத்தின் நெடுந்தீவு, நயினாதீவு, அனலைதீவு, எழுவை தீவு ஆகிய தீவக பகுதிகளுக்கு நேற்றையதினம் விசேட படகுகள் மூலம் வாக்கு பெட்டிகள் கொண்டு செல்லப்பட்டன.
இந்நிலையில் இன்றையதினம் வாக்குப்பதிவு நடவடிக்கை நிறைவடைந்ததையடுத்து நெடுந்தீவு தவிர ஏனைய தீவக பகுதிகளில் இருந்து வாக்கு பெட்டிகள் விசேட படகுகளில் குறிகட்டுவான் பகுதிக்கு எடுத்து வரப்பட்டு, பேருந்துக்களில் வாக்கெண்ணும் நிலையமான யாழ் மத்திய கல்லூரிக்கு எடுத்துவரப்படும் நடவடிக்கை இடம்பெற்று வருகின்றது.
அதேவேளை சற்று முன்னர் நெடுந்தீவில் இருந்து வாக்கு பெட்டி விமானப்படையினரின் விசேட உலங்கு வானுர்தியில் யாழ் மத்திய கல்லூரிக்கு எடுத்து வரப்பட்டது.
இந்நிலையில் உலங்கு வானுர்தியில் கொண்டுவரப்பட்ட வாக்குப்பெட்டியினை யாழ் மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர் மற்றும் தேர்தல் ஆணைக்குழு உத்தியோகத்தர்கள் பொறுப்பேற்றனர்.
இந்நிலையில் இன்னும் சற்று நேரத்தில் வாக்கெண்ணும் பணிகள் ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.