
பழைய அலைபேசிக்கு சார்ஜ் போட முயற்சித்த சிறுவனின் கையிலேயே பேட்டரி வெடித்ததால், சிறுவனின் 4 விரல்கள் துண்டாகிய சோகம் நடந்துள்ளது.
பழைய மின்சாதன பொருட்களை உபயோகம் செய்வதில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். இல்லையென்றால், சில நேரங்களில் அவை பெரும் சோகத்திற்கு வழிவகுத்துவிடும்.
ஏனெனில், உபயோகம் செய்யப்படாத பழைய மின்சாதன பொருட்கள் என்ன நிலையில் இருக்கிறது? என்பது அதனை உபயோகப்படுத்தும் போது மட்டுமே தெரியவரும்.
கர்நாடக மாநிலத்தில் உள்ள ஹவேரி மாவட்டத்தின் ஹூப்பள்ளி (Hubballi) சாவனூர் அருகேயுள்ள ஹீரலிக்கோப்பி கிராமத்தை சார்ந்த 10 வயது சிறுவன் கார்த்திக் கடலாகி (Karthik Kaladagi). இந்த சிறுவன் பெற்றோருடன் வசித்து வந்த நிலையில், சம்பவத்தன்று செல்போன் பேட்டரி வெடித்ததில் கை விரல்களில் காயம் ஏற்பட்டுள்ளது.
இதனால், சிறுவன் அலறித்துடிக்கவே, வீட்டிற்குள் இருந்த பெற்றோர் வெடிப்பு மற்றும் சிறுவனின் அலறல் சத்தம் கேட்டு அதிர்ச்சியடைந்து சென்று பார்த்துள்ளனர். சிறுவன் இரத்த வெள்ளத்துடன் கை விரல்கள் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளான்.
இதனையடுத்து, சிகிச்சைக்காக சாவனூர் (Savanur Hospital) அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுவன், மேல் சிகிச்சைக்காக ஹூப்பள்ளி கிம்ஸ் (KIMS) மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டான்.
அங்கு சிறுவனுக்கு கைகளில் உள்ள 4 விரல்களும் நீக்கப்பட்ட நிலையில், வலது கண்ணில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதா? என்பதை கண்டறிய சோதனையும் நடத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பெற்றோர்கள் தெரிவிக்கையில், ” சிறுவன் வீட்டில் இருந்த பழைய அலைபேசியை மீண்டும் உபயோகம் செய்யும் பொருட்டு, அதனை சார்ஜ் ஏற்ற முடிவு செய்தான். இதற்காக மின் பொத்தானை அழுத்தியபோது, அவன் கைகளில் வைத்திருந்த செல்போன் பேட்டரி திடீரென வெடித்தது.
இதனால் சிறுவன் கை விரல்கள் தொங்கிய நிலையில், சாவனூர் மருத்துவமனையில் அனுமதித்தோம். அங்கு சிறுவனுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் சிறுவன் நல்ல நிலையில் இருப்பதாக தெரிவித்தனர்.
கை விரல் பாதிப்பு குறித்து எதுவும் தெரிவிக்கவில்லை. பின்னர், சிறுவனை மேல் சிகிச்சைக்காக கிம்ஸ் மருத்துவமனைக்கு எடுத்து செல்ல தெரிவித்தார்கள்.
அங்கு சென்ற பின்னர், மருத்துவர்கள் சோதனை செய்துவிட்டு சிறுவனின் வலதுகையில் உள்ள 4 விரலை எடுக்க வேண்டும், ஏன் இவ்வுளவு தாமதமாக இங்கு அழைத்து வந்தீர்கள்? விரைந்து அழைத்து வந்திருக்கலாமே? என்று கேள்வி எழுப்பினார்கள்.
இதன்பின்னர் நடந்ததை அவர்களிடம் தெரிவித்தோம். மேலும், சாக்கனூர் மருத்துவமனையில் தாமதம் ஆக்கப்பட்டதே, சிறுவனின் கை விரல்கள் எடுக்கப்பட காரணம் ” என்று குற்றம்சாட்டியுள்ளனர். இது தொடர்பாக காவல் துறையினர் விசாரணையும் நடந்து வருகிறது.