சம்மாந்துறை விபத்து தொடர்பான அப்டேட்!

சம்மாந்துறை, மாவடிப்பள்ளி பகுதியில் மாணவர்களை ஏற்றிச் சென்ற உழவு இயந்திரம் வெள்ளம் காரணமாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் காணாமல் போனவர்களில் இதுவரை 07 பேர் உயிரிழந்த நிலையில் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.‍

அம்பாறை மாவட்டம் காரைதீவு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாவடிப்பள்ளி, சின்னப்பாலம் அருகே உழவு இயந்திரத்தின் ஊடாக சம்மாந்துறை பகுதிக்கு பயணித்த நிந்தவூர் மதரஸா மாணவர்கள் உள்ளிட்ட பலர் வௌ்ளத்தில் சிக்கி கடந்த செவ்வாய்க்கிழமை (26) மாலை காணாமல் போயிருந்தனர்.

பின்னர், அன்றைய தினம் மாலை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட 5 மாணவர்கள் உயிருடன் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.

காலநிலை சீர்கேடு மற்றும் இருள் காரணமாக மீட்பு பணிகள் மறுநாள் புதன்கிழமை (27) காலை ஆரம்பமானது.

இதன்போது, 04 மாணவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டன.

இந்த நிலையில், மீட்பு பணிகள் இன்றும் தொடர்ந்த நிலையில் மேலும், மூன்று சடலங்கள் மீட்கப்பட்டன.

15 வயது மாணவன் ஒருவரும், உழவு இயந்திரத்தின் சாரதியும், குறித்த டிராக்டரில் பயணித்த கல்முனை புகை பரிசொதனை நிலைய ஊழியர் ஒருவரும் இவ்வாறு சடலங்களாக மீட்கப்பட்டனர்.

இந்த தகவலுக்கு அமைவாக இதுவரை மொத்தமாக 07 சடலங்கள் மீட்புப் குழுவினரால் மீட்கப்பட்டு சம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

குறித்த சடலங்கள் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி அப்துல் ஹமீட் அல் ஜவாஹீர் மேற்கொள்வதுடன், பிரேத பரிசோதனைகள் முடிக்கப்பட்டு குடும்பத்தினரிடம் சடலங்கள் கையளிக்கப்பட்டு வருகின்றன.

கடந்த செவ்வாய்க்கிழமை அன்று நிந்தவூரில் இருந்து சம்மாந்துறை நோக்கிச் சென்ற 12 பேரை ஏற்றிச் சென்ற உழவு இயந்திரமே இவ்வாறு விபத்திற்குள்ளானது.

சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மாணவர்கள் சம்மாந்துறை பகுதியைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *