வட்டுவாகல் பாலத்தை பார்வையிட்ட பிரதிஅமைச்சர் உபாலி உள்ளிட்ட குழுவினர்- புதிய பாலம் அமைக்க நடவடிக்கை..!

வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரனின் கோரிக்கையை ஏற்று கூட்டுறவு அபிவிருத்தி பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க உட்பட, பாராளுமன்ற உறுப்பினர்களான ப.சத்தியலிங்கம், செ.திலகநாதன், ம.ஜெகதீஸ்வரன் ஆகியோருடன் முல்லைத்தீவு மாவட்டசெயலர், திணைக்கள அதிகாரிகள் உள்ளிட்ட குழுவினர் இன்றையதினம்(29) முல்லைத்தீவு வட்டுவாகல் பாலத்தைப் பார்வையிட்டனர்.
அதேவேளை நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் முன்வைத்த கோரிக்கையை ஏற்று, உரிய அமைச்சுக்களுடன் பேசி புதிய பாலத்தை அமைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க தெரிவித்திருந்தார்.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் இன்று(29)  அனர்த்தப் பாதிப்பு நிலைமைகள் தொடர்பாக ஆராயும் விசேட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் இடம்பெற்றது.
குறித்த கூட்டத்தில் வட்டுவாகல் பாலம் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் சுட்டிக்காட்டியதுடன், அதனால் குறித்த வீதியைப் பயன்படுத்தும் மக்கள் எதிர்நோக்கும் இடர்பாடுகள் குறித்தும் சுட்டிக்காட்டியிருந்தார்.
அத்தோடு குறித்த வட்டுவாகல் பாலத்தை பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க உள்ளிட்ட ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்கள், மாவட்ட செயலர் உள்ளடங்கலாக, திணைக்கள அதிகாரிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் நேரடியாக பார்வையிட்டு, புதிய பாலத்தை அமைப்பதற்குரிய நடவடிக்கை மேற்கொள்ளவேண்டுமெனவும் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் கோரிக்கை விடுத்திருந்தார்.
அதற்கமைய ரவிகரனின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க, உள்ளிட்ட ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்களும், திணைக்கள அதிகாரிகளும் வட்டுவாகல் பாலத்திற்கு நேரடி விஜயமொன்றை மேற்கொண்டு வட்டுவாகல் பாலத்தின் பாதிப்பு நிலைமைகள் தொடர்பில் நேரடியாகப் பார்வையிட்டனர்.
மேலும் கோரிக்கையை ஏற்று இந்தவிடயத்தை உரிய அமைச்சுக்களுடனும், ஜனாதிபதி உள்ளிட்டவர்களுடனும் பேசி புதிய பாலம் அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமென பிரதிஅமைச்சர் உபாலி சமரசிங்க தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *