விலைவாசி உயர்வை கண்டித்து வவுனியாவில் போராட்டம்

விலைவாசி உயர்வை கண்டித்தும், எரிபொருட்களின் விலையேற்றம், மற்றும் மக்களின் உரிமைக்காக போராடுபவர்களை கைதுசெய்வது உட்பட பல்வேறு விடயங்களிற்கு எதிர்ப்பு தெரிவித்து புதிய ஜனநாயக மாக்சிச லெனினிச கட்சியினரால் வவுனியா பழையபேருந்து நிலையத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்று இன்றுசனிக்கிழமை முன்னெடுக்கப்பட்டது.

ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கருத்து தெரிவித்த போது,

கோட்டாபாய, மகிந்த தலைமையிலான அரசாங்கம் மக்கள் விரோத செயற்பாடுகளை தொடர்ந்து கொண்டிருப்பதனை அண்மை காலங்களாக அவதானிக்க முடிந்துள்ளது.

குறிப்பாக உணவுப்பொருட்கள் மற்றும், எரிபொருள் ஆகியவற்றின் சடுதியானவிலை அதிகரிப்பானது நாட்டுமக்களை, குறிப்பாக உழைக்கும் மக்களை வாட்டிவதைத்து வருகின்றது. மக்களின் நலனை முன்னிறுத்துவோம் என்று ஆட்சிக்கு வந்த ஆட்சியாளர்கள் மக்கள் மீது சுமைகளையும், துன்பங்களையும் ஏற்ப்படுத்திய நிலையில், மக்கள் வீதியிலே இறங்கி போராட வேண்டிய நிலமைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இதேவேளை நாட்டின் சொத்துக்களையும் இறைமையும் தாரைவார்க்கும் அரசின் செயற்பாடுகளை கண்டிக்கும் அரசியல் சமூக செயற்பாட்டாளர்களை பொலிஸ் அராஜகத்தை கட்டவிழ்த்து கைதுசெய்து தனிமைப்படுத்தும் செயலை இந்த அரசு முன்னெடுத்து வருகின்றது.

விவசாயத்தினை நம்பி வாழும் மக்கள் உரத்தினை பெற்றுக்கொள்ள முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். அதற்கான மாற்று கொள்கை அரசினால் முன்னெடுக்கப்படவில்லை. இவற்றுக்கு வன்மையான கண்டனங்களை நாம் தெரிவித்துக்கொள்கின்றோம். என்றனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் போராடும் மக்கள் மீது பொலிசாரை ஏவாதே, இலவச கல்வியை இராணுவமயப்படுத்தாதே, பெண் தலைமைத்துவ குடும்பங்களிற்கு கொரோனா நிவாரணம் வழங்கு, அரசியல் கைதிகளை விடுதலைசெய் போன்ற வாசகங்கள் தாங்கிய பதாதைகளை ஏந்தியிருந்ததுடன், கோசங்களையும் எழுப்பியிருந்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் சமூகநீதிக்கான வெகுஜன அமைப்பினர், இலங்கை ஆசிரியர்சங்க உறுப்பினர்கள், தேசியகலை இலக்கிய பேரவையினர், புதிய சிந்தனை பெண்கள் அமைப்பு உட்பட பொது அமைப்புக்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்

Leave a Reply