இரவு முழுவதும் விழித்திருந்தும் புகுந்த காட்டு யானைகள் – உயிர் பிழைத்த தாயும் மகளும்.

தற்போது செய்கை பண்ணப்பட்டுள்ள பெரும்போக வேளாண்மைச் செய்கை மட்டக்களப்பு மாவட்டத்தில் அறுவடை செய்யப்பட்டு வரப்படுகின்றன. அண்மையில் ஏற்பட்டிருந்த மழை வெள்ளத்தில் அழிந்து போய் மீதமாகவுள்ள தமது வாழ்வாதாரம் தொழிலான வேளாண்மைச் செய்கையில் எஞ்சியுள்ளதை அறுவடை செய்வதற்கு முன்னமே காட்டு யானைகள் துவம்சம் செய்து வருவதாக அப்பகுதி விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

அதற்காக  இரவு முழுவதும் விழித்திருந்து  காட்டு யானைகளிடமிருந்து தமது நெற்பயிரைப் பாதுகாக்க வேண்டிய நிலமைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்டம் மண்டூர் பகுதி விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

. தமது வயற் பகுதியை அண்மித்துள்ள சிறிய சிறிய பற்றைக் காடுகளிலும், வாய்க்கால் ஓரங்களிலும் இவ்வாறு காட்டு யானைகள் தங்கி நின்று இரவு வேளைகளில் வயல் நிலங்களுக்குள் உட்புகுந்து விளைந்த வயல்நிலங்களை துவம்சம் செய்து வருவதனால் தமது இவ்வருடத்தின் வாழ்வாதாரம்,  தொழில் இன்னும் பாரிய நட்டத்தை ஏற்படுத்துவதாக நெற்பயிரை இரவு வேளையில் யானைகளின் அழிவுகளிலிருந்து பாதுகாக்கதற்காக காவல்காக்கும் அப்பகுதி விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

ஏற்கனவே வெள்ளத்தில் அள்ளுண்டு போனதில் எஞ்சியுள்ள நெற்பயிரை இரவு பகலாக கண் விழித்திருந்து அறுவடை செய்ய வேண்டிய நிலமைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகவும் அப்பகுதி விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

மேலும் வியாழக்கிழமை மட்டக்களப்பு படுவாங்கரைப் பகுயில் அமைந்துள்ள பல கிராமங்களை ஊடறுத்து 5 யானைகளைக் கொண்ட கூட்டம் உலாவியதால் அப்பகுதியில் மக்கள் மத்தியில் பெரும் பதட்டத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில்  கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை அப்பகுதியில் அமைந்துள்ள கற்சேனை எனும் கிராமத்தினுள் புகுந்த காட்டு 3 யானை அங்கிருந்த வீடு ஒறையும், பயன்தரும் தென்னை, வாழை உள்ளிட்ட பயிரினங்களையும் அழித்து விட்டுச் சென்றுள்ளதாகவும், அந்த வீட்டில் வசித்து வந்த தாயும் மகளும் தெய்வாதீனமாக உயிர் தப்பியதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் படுவாங்கரைப் பிரதேசத்தில் மிக நீண்ட காலமாகவிருந்து காட்டுயானைகளின் தொல்லைகளும், அட்டகாசங்களும் அதிகரித்துள்ளதுடன், யானைகள் கிராமங்களுக்குள் உட்புகாமலிருப்பதற்காக யானைப் பாதுகாப்பு வேலைகளை அமைத்துத் தருமாறு மக்கள் கோரிக்கை விடுத்தும் இதுவரையில் நிறைவேறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *