விரைவில் மக்களின் பாவனைக்காக கையளிக்கப்படவுள்ள சிங்கராஜ வனப் பகுதி ஊடான வீதி!

சிங்கராஜ வன பகுதி ஊடாக லங்காகமாவிலிருந்து நெலுவவுக்கான வீதி சுற்றுச் சூழலுக்கு தீங்கு விளைவிக்காத வகையில் அமைக்கப்பட்டுள்ளது. வீதியை அமைக்க நாங்கள் எந்த மரத்தையும் வெட்டவில்லை. விரைவில் மக்களின் பாவனைக்காக கையளிக்கப்படும் என நெடுஞ்சாலை அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்தார்.

லங்காகம – நெலுவ வீதியின் தற்போதைய நிலைமை குறித்து ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ இந்த கருத்துக்களை தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில், எதிர்க்கட்சிகள் தலைமையிலான அரசியல் கட்சிகள் லங்காகம முதல் நெலுவ வரையில் வீதி நிர்மாணிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந்த சாலை அமைக்க வீதி நிர்மாணிக்கப்படும்போது அவர்கள் யாரும் அதனை வரவேற்கவில்லை. இதனைப் பார்க்க வரவில்லை.

நெடுஞ்சாலைகளுக்குப் பொறுப்பான அமைச்சர் என்ற முறை வகையில், லங்காகமவுக்கு சென்று இந்த வீதி எப்படி நிர்மாணிக்கப்படுகிறது என்று பார்க்க வருமாறு பலமுறை நாடாளுமன்றத்திலும் அதற்கு வெளியிலும் கோரினேன்.

அங்கு செல்வதற்கு வாகனம் மற்றும் மற்ற அனைத்து வசதிகளையும் வழங்குவதாகவும் கூறினேன். ஆனால் எதிர்க்கட்சிகள் என்ன செய்தன. ஜேவிபி மற்றும் பல்வேறு தனி நபர்களை ஒன்றிணைத்து கொழும்பில் இந்த வீதி அமைப்பதற்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்தன. மரங்கள் வெட்டப்படுகின்றன. இதன் மூலம் சிங்கராஜா அழிக்கப்படுகிறது என்றார்கள். எங்கே அவ்வாறு நடந்ததா?

இந்த வீதியை நிர்மாணிப்பதற்காக சிங்கராஜ வனப் பகுதியில் ராஜபக்க்ஷவினர் மரங்களை வெட்டி வீழ்த்துவதாக அவர்கள் உலகம் முழுவதற்கும் கூறினார்கள். இந்த வீதியை நிர்மாணிக்க நாங்கள் எந்த மரத்தையும் வெட்டவில்லை. இந்த வீதி நிர்மாணிப்பணிகள் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் நேரடி மேற்பார்வையின் கீழ் இராணுவத்தின் பொறியியல் படையணியால் மேற்கொள்ளப்படுகிறது.

நிர்மாணப்பணிகள் 98% நிறைவடைந்துள்ளன. விரைவில் மக்களின் பாவனைக்காக இதனை கையளிக்க இருக்கிறோம். கொவிட் நிலையிலும் இந்த வீதியை நிர்மாணிப்பதற்கு உந்துசக்தி அளிக்கும் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்‌ஷவுக்கு நன்றி தெரிவிக்கிறேன் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *