இலங்கையுடனான கடன் மறுசீரமைப்பு; 7 பில்லின் டொலர்கள் சீனாவுக்கு நட்டம்! சீனத்தூதுவர் தெரிவிப்பு

 

இலங்கையுடனான வெளிநாட்டுக் கடன்மறுசீரமைப்பை மேற்கொண்டதன் காரணமாக சீனாவின் பிரதான ஏற்றுமதி, இறக்குமதி பங்குதாரரான சீன எக்ஸிம் வங்கிக்கு 7 பில்லியன் அமெரிக்க டொலர்கள் நட்டம் ஏற்பட்டுள்ளது என சீனத்தூதுவர் கீ சென்ஹொங் தெரிவித்தார்.

அத்துடன், தெற்காசியாவில் இலங்கை, இந்தியா, சீனா ஆகியன ஒன்றிணைந்து ‘கூட்டுச் செயற்றிட்டமொன்றை’ முன்னெடுக்க வேண்டும் என்பது எனது கனவாக உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் உள்ள சீனத்தூதரகத்தில் சீனத்தூதுவர் கீ சென்ஹொங்கிற்கும் ஊடகப்பிரதிநிதிகளுக்கும் இடையில்,  உரையாடல் நடைபெற்றது. 

இதன்போது கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இலங்கையுடன் சீனாவே முதன்முதலாக கடன்மறுசீரமைப்பு ஒப்பந்தத்தினை கைச்சாத்திட்டது. அந்த வகையில் வெளிநாட்டு கடன் மறுசீரமைப்புக்கு முதலில் இணங்கிய நாடாகவும் சீனா இருக்கின்றது.  

ஆனால் இந்தியா உள்ளிட்ட ஏனைய நாடுகள் இன்னமும் வெளிநாட்டு கடன் மறுசீரமைப்புக்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திடவில்லை.

அதேநேரம், இலங்கையுடனான கடன்மறுசீரமைப்பை சீனா மேற்கொண்டதன் மூலமாக பெருந்தொகையான நிதியை இழந்துள்ளது. 

குறிப்பாக இலங்கையுடனான சீனாவின் கடன்மறுசீரமைப்பு இணக்கத்தினால் 7பில்லியன் அமெரிக்க டொலர்களை சீனாவின் எக்ஸிம் வங்கி இழந்துள்ளது.

இலங்கையின் கடன்மறுசீரமைப்புக்காக சீனா பெருந்தியாகத்தைச் செய்துள்ளதோடு அதிகளவான பங்களிப்பையும் வழங்கியுள்ளது. ஆனால் அந்த விடயங்களை சீனா பிரசாரம் செய்வதில்லை.  என்றார்.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இந்த ஆண்டின் முற்பகுதியில் சீனாவுக்கு விஜயம் செய்தார்.அவரது விஜயத்தின்போது 15 உடன்படிக்கைகள் கைச்சத்தாகியுள்ளதோடு, அவை விரைவாக நடைமுறைப்படுத்துவதற்கும் இரு நாட்டுத் தலைவர்களும் இணங்கியுள்ளனர். 

இதன்மூலமாக இருநாட்டு பிரஜைகளும் அதிகளவான நன்மைகளை அடையவுள்ளனர்  என்றார். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *