இந்தியா நாட்டுப்பயணிகளுக்கு இலங்கை அரசாங்கம் சுற்றுலாக் கதவைத் திறந்திருப்பதன் ஊடாக தென்னாபிரிக்கா திரிவு உட்பட நான்காவது அலை இலங்கையில் பரவுகின்ற அபாயம் உள்ளதாக ஜே.வி.பி தெரிவிக்கின்றது.
இந்தியாவிலும் இன்று அதிகளவில் கொரோனா தொற்று பரவிவருகின்ற நிலையில் இலங்கை அரசாங்கம் வேண்டுமென்றே கொரோனா தொற்றுக்கு அழைப்பிதழ் விடுத்திருப்பதாக ஜே.வி.பியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான மருத்துவர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவிக்கின்றார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை தெரிவித்தார்.
இலங்கையில் இன்று உயரிய அளவில் கொரோனா பரவல் ஏற்பட்டு வருகின்ற நிலையில் இந்தியாவில் இருந்து சுற்றுலாப் பயணிகளை அழைத்துவருவதற்கு ஸ்ரீலங்கா அரசாங்கம் இன்று நடவடிக்கை எடுத்து வருகின்றது.
மேலும் அதற்காக விளம்பரம் ஒன்றை அரசாங்கம் வெளியிட்டுள்ளது. அதாவது இரு இந்திய சுற்றுலாப் பயணிகள் இணைந்து விமானச்சீட்டைப் பெற்றால் அவர்களுக்கு இலவசமாக இன்னுமொரு விமானப் பயணச்சீட்டை வழங்கும் விளம்பரத்தை இலங்கை அரசாங்கம் வெளியிட்டுள்ளது. இன்று இந்தியா சுற்றுலாப் பயணிகளுக்காக இலங்கை திறக்கப்பட்டுள்ளது.
மேலும் இவ்வாறு தான்தோன்றித்தனமான தீர்மானங்களை எடுத்து மீண்டும் ஒருமுறை கொரோனா தொற்று பரவுகின்ற நிலைமையை ஏற்படுத்தவா ஸ்ரீலங்கா அரசாங்கம் முனைகின்றது? கடந்த வருடம் மார்ச் மாதத்தில் இத்தாலியில் மிகவேகமாக கொரோனா தொற்றுப் பரவிய காலத்தில் இத்தாலிய சுற்றுலாப் பயணிகளுக்கு இலங்கை தனது கதவைத்திறந்தது. அதேபோல ரஷ்யா மற்றும் உக்ரைன் நாட்டுப் பயணிகளை ஸ்ரீலங்காவுக்கு அதிகாரிகள் அழைத்துவந்தனர்.
பஸில் ராஜபக்ஷ உள்ளிட்டவர்கள், உக்ரைன் பயணிகளை கோவிட் கட்டுப்பாடு மற்றும் பரிசோதனைக்காகவே ஸ்ரீலங்காவுக்கு அழைக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்தனர். அதனூடாக மூன்றாவதுஅலை நாட்டிற்குள் ஏற்பட்டிருக்கின்றது. எனினும் நியூஸிலாந்து உள்ளிட்ட நாடுகள் வெளிநாட்டுப் பயணிகளுக்கு கதவுகளை அடைத்துள்ள நிலையில், தற்போது தென்னாபிரிக்காவில் பரவுகின்ற மாறுபட்ட கொரோனா தொற்றை வரவழைப்பதற்கே ஸ்ரீலங்கா முயற்சிக்கின்றது





