நாடு அமைதி அடையும் போது முஸ்லிம்களை சீண்டுவது வழமையாகிவிட்டது!

நாடு வழமைக்கு திரும்பி சுமுகமான நிலைமைகள் ஏற்படுகின்ற போது அடிப்படைவாதம், மதவாதம், இனவாதம் போன்ற சொற்களை கையில் ஏந்துவது வழமையாகிவிட்டது. என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மூதூர் தொகுதிக்கான கொள்கை பரப்புச் செயலாளரும் கிண்ணியா நகரசபை உறுப்பினருமான எம்.எம். மஹதி தெரிவித்துள்ளார்.

இன்று வியாழக்கிழமை (02) ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்தும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

சுமூகமான ஒரு நிலைமை ஏற்பட்டு நாடு வழமைக்கு திரும்புகின்ற போது அடிப்படைவாதம், இனவாதம், மதவாதம் போன்ற சொற்பதங்களால் முஸ்லிம்கள் மீது அவதூறுகள் உண்டாக்கப் பட்டு அதன் பெயரால் முஸ்லீம்களின் பொருளாதாரம், சொத்துக்கள், உயிர்கள் அழிக்கப்படுவது அவ்வப்போது அரங்கேற்றப்பட்டுக் கொண்டே இருக்கின்றன.

அந்த வகையில் ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட ஆட்சிமாற்றத்தை தொடர்ந்து இலங்கையிலும் அடிப்படைவாதம், மதவாதம் வளர்வதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன, என்றும் தப்லீக் ஜமாஅத்தை தடை செய்ய வேண்டும் என்றும் பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் அவர்களால் கருத்துகள் தெரிவிக்கப் பட்டிருப்பது முஸ்லிம் சமூகத்திற்கு மாபெரும் அச்சத்தையும் பீதியையும் ஏற்படுத்துகின்றன.

கடந்த காலங்களில் பல்வேறு சந்தர்ப்பங்களில் இவ்வாறான செயற்பாடுகள் அடுக்கடுக்காக அரங்கேற்றப்பட்டன. அவை எவற்றிலுமே முஸ்லிம் சமூகம் குற்றவாளியாக காணப்படவுமில்லை, நிரூபிக்கப் படவுமில்லை. ஆயினும் அழிவுகள் மாத்திரம் ஏற்படுத்தப்பட்டன.

கொரோனா அனர்த்தம் காரணமாக பொருளாதாரமும் மக்களும் பாதிக்கப்பட்டு நாடு அவதிப் படுகின்ற இத் தருணத்தில் இவ்வாறான கருத்துக்கள் அவரால் வெளியிடப் பட்டிருப்பது பெரும் கவலையை ஏற்படுத்துகின்றது.

இக்கட்டான இந்த நேரத்தில் இவ்வாறான சொற்பதங்களால் பெரும்பான்மை சமூகம் ஆசுவாசப் படுத்தப்பட்டு மீண்டுமொரு அழிவுக்கு இந் நாட்டையும் மக்களையும் கொண்டு செல்ல வாய்ப்புகள் ஏற்படுத்தப்பட்டு விடக்கூடாது.

எனவே அவ்வப்போது முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக எந்த அடிப்படைகளும் இன்றி உண்டாக்கப்படுகின்இவ்வாறான இட்டுக் கட்டல்கள் குறித்து பொலிஸாரும், புலனாய்வுத் துறையினரும் கூடுதல் அவதானம் செலுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன் எனவும் அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *