மன்னாரில் மின்தகன நிலையம் அமைப்பதற்காக நகர சபையால் 50 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு

மன்னார் மாவட்டத்தில் மின்தகன நிலையம் அமைப்பதற்காக மன்னார் நகர சபையால் 50 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மன்னார் நகர சபையின் முதல்வர் ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன் இன்று (வியாழக்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போது இந்த விடயம் குறித்து தெரிவித்தார்.

இதன்போது மேலும் தெரிவித்த அவர், “மன்னார் மாவட்டத்தில் கொரோனா தொற்று காரணமாக உயிரிழப்பவர்களின் சடலங்கள் வவுனியாவுக்கு கொண்டுசெல்லப்பட்டு தகனம் செய்யப்பட்டு வந்தது.

இந்த நிலையில் மன்னார் மாவட்டத்தில் மின் தகன நிலையம் ஒன்றை உடனடியாக அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

அதற்கமைவாக மன்னார் மாவட்டச் செயலாளர் தலைமையில் அண்மையில் அவசர கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டதோடு, மாவட்டத்தில் உள்ள உள்ளூராட்சி மன்றங்களின் ஊடாக நிதி உதவி கோரப்பட்டது.

அதற்கமைவாக நேற்றைய தினம் மன்னார் நகர சபையில் விசேட கூட்டம் கூட்டப்பட்டு கலந்துரையாடப்பட்டு மன்னாரில் அமைக்கப்படவுள்ள மின் தகன நிலையத்திற்கு 50 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்வது என சகல உறுப்பினர்களின் ஒத்துழைப்போடும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும் பொது அஞ்சலி மண்டபம், சடலம் எரியூட்டும் இடத்திற்கு அருகாமையில் கிரியைகளை செய்வதற்கு தேவையான மண்டபம் மற்றும் மலசல கூடங்களை அமைப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் குறித்த வேலைத்திட்டங்கள் சில நாட்களில் ஆரம்பிக்கப்படும்” என அவர் மேலும் தெரிவித்தார்.

மன்னார் மாவட்டத்தில் மின் தகன நிலையம் அமைக்க 30 மில்லியன் ரூபாய் நிதி தேவை என தீர்மானிக்கப்பட்டுள்ள நிலையில், மன்னார் நகர சபை குறித்த நிதியை ஒதுக்கீடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *