முறிகண்டி பிள்ளையார் ஆலய வளாகத்தில் உள்ள வர்த்தகர்களால் விடுக்கப்படும் குற்றச்சாட்டு

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேச சபை எல்லைக்குட்பட்ட முறிகண்டி பிள்ளையார் ஆலய வளாகத்தில் உள்ள வர்த்தக நிலையங்கள் சீரமைக்கப்படாத நிலையில் கொவிட் காலத்திலும் வருமானவரி அறவீடு செய்யப்படுவதாக வர்த்தகர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

எனினும் தற்பொழுது கொவிட் பரவல் நிலை காணப்படும் சூழலில் மக்களின் வருகை மிக மிக குறைவாகவே காணப்படுகின்றது. இந்த நிலையிலும் மாதாந்தம் 1000 ரூபா பிரதேச சபையல் அறவிடப்படுவதாக வர்த்தகர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

மீள்குடியேற்றம் செய்யப்பட்ட காலத்தில் தற்காலிகமாக அமைக்கப்பட்ட கச்சான் கடைகள் இன்று உக்கி விழும் அபாயத்தில் உள்ளது.

எனினும் இந்த நிலையில் நிரந்தர கட்டட வசதிகளை ஏற்பாடு செய்து தருமாறு புதுக்குடியிருப்பு பிரதேச சபையிடம் கேட்ட பொழுதும் இன்று வரை எதுவும் மேற்கொள்ளப்படவில்லை என வர்த்தகர்கள் குறிப்பிடுகின்றனர்.

கடைகள் மூடப்பட்ட நிலையில் தமது வியாபார பொருட்களை பிராணிகள் அழித்து வருவதாகவும், பிரயாணிகள் வருகை தரும்போது கடைகளின் நிலை குறித்து கவலைகளை வெளிப்படுத்துவதாகவும் வர்த்தகர்கள் குறிப்பிடுகின்றனர்.

இதேவேளை, முன்னாள் போராளியான தனக்கு வாழ்வாதாரத்துக்காக இடம் மாத்திரமே வழங்கப்பட்டதாகவும், தற்காலிக கடையை தானே அமைத்த நிலையில் இன்று அது சேதமடைந்துள்ளதாகவும் முன்னாள் போராளி தெரிவிக்கின்றார்.

இவ்வாறான நிலையிலும், கொவிட் பரவல் காலத்திலும் தம்மிடம் வருமான வரியாக குத்தகைப் பணம் பெறப்படுவதாகவும் அவர்கள் குறிப்பிடுகின்றனர்.

தமது வர்த்தக செயற்பாடுகளிற்கு ஏற்ற வகையில் நிரந்தர கடைகளை அமைத்து தருமாறும், தற்கால சூழலில் வரி அறவீட்டை இடை நிறுத்துமாறும் அவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *