“அனைவருக்கும் தன்னம்பிக்கை கொடுப்பவனாக இருத்துவிட்டு மரணிக்க வேண்டும்” ஊடக போராளி பிரகாஷ்

யாழ்ப்பாணத்தில் இளம் துடிப்பான சுயாதீன ஊடகவியலாளர் ஞானப்பிரகாசம் பிரகாஷ் (வயது 39) கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளார்.

நேற்று தனக்கு கொரோனா தொற்று இருப்பதாக தனது முகநூலில் பதிவிட்டு இருந்தார்.வீட்டில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வந்த நிலையிலே திடீரென சுவாசச் சிரமம் ஏற்பட்ட நிலையில், சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார் என தெரியவருகின்றது.

இவருடைய திடீர் மரணம் பலரையும் அதிர்ச்சியல் ஆழ்த்தியுள்ளது. இவர் தான் இறந்தால் தனது உடலை யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீடத்திற்கு வழங்குமாறு கடந்தவருடம் மரணசாசனம் எழுதிக்கொடுத்துள்ளார்.

தற்பொழுது இந்த விடயம் தொடர்பிலும் இவரின் மரணம் தொடர்பிலும் சமூகவலைத்தளங்களில் அதிகமாக பேசப்பட்டு வருகின்றது.இவரின் இறுதிப் பதிவு எல்லோரையும் கலங்கவைப்பதோடு இறப்புச் செய்தியை கேட்ட அனைவரும் தமது இரங்கலை தெரிவித்த வண்ணம் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை இவர் ஒரு மாற்றுத்திறனாளி ஆக இருந்தாலும் அது, எதற்கும் தடை இல்லை என்பதை நிருபித்து காட்டிவிட்டு இறந்துள்ளார். இவர் சுயாதீன ஊடகவியாளளராக செயற்பட்டு வரும் நிலையில் இவரின் செய்திகளை பின்பற்றுவதற்கு என்று இவருக்கென்று தனிரசிகர் பட்டளமே உள்ளது என்று தான்கூற வேண்டும்.

இவர் தரம் 5 வரை படித்தது என்று கூறினால் பலரும் நம்ப மாட்டார்கள். ஒரு சுயாதீன ஊடகவியளாராக வந்தது எப்படி தனது வாழ்க்கை எவ்வாறு நகர்ந்தது என்று “பிரகாஸ் எனும் நான்” எனும் சுயசரிதை நூல் ஊடாக தன்னை தாக்கிய நோய் பற்றியும் , அதனால் தான் துவண்டு விடாது எவ்வளவு தூரம் பயணித்து இருக்கிறேன் என்பது பற்றியும் எழுதியிருந்த நிலையில் அவ் நுலை வெளியிடுவதற்கு முன்னரே இறந்துள்ளார்.

காணாமல் போனோர்களுக்காகவும் , மலையக மக்களின் சம்பள பிரச்சனைக்கான போராட்டங்களில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். அந்த போராட்டங்களுக்கு தன்னால் முடிந்த பங்களிப்புக்களை செய்தார். பல பிரச்சனைகளுக்காக முகம் கொடுத்து சமூகவலைத்தளங்களை இப்படியும் பயண்படுத்தலாம் என சமூகத்திற்கிற்கு நல்ல கருத்தை தந்து விட்டு இவ் உலகை விட்டு பிரிந்து சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அவரின் பதிவு ,
பாகம்

நான், இந்த முகநூலுக்கு வந்து கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகள் கடந்தே என்னை பற்றி பொது வெளியில் முழுமையாக வெளிப்படுத்திக் கொண்டேன். அது வரை என்னை வெளிப்படுத்தவில்லை.

என்னை வெளிப்படுத்திக் கொள்ளாமைக்கான காரணங்களில் ஒன்று என் மீது பரிதாப உணர்வு ஏற்பட்டுவிடக்கூடாது. இரண்டு என்னிடம் உள்ள தயக்கம். ஆயினும் நெருக்கமாக பழகியோருக்கும், என்னை நேசித்தவர்களுக்கு மட்டும் என்னை பற்றி முழுமையாக வெளிப்படுத்தியுள்ளேன்.

இப்போது, தயக்கத்தைக் களைந்து பொது வெளியிலும் என்னை வெளிப்படுத்திக் கொள்ளவதற்கான முதல்படியாக மலையகத் தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு வழங்கக் கோரி இடம்பெற்ற போராட்டத்தின் நெறிப்படுத்தல் செயற்பாட்டாளர்களில் ஒருவராக இணைந்து நானும் கலந்துகொண்டேன்.

குறித்த, போராட்டத்திலும் போராட்டப் புகைப்படங்களிலும் என்னை பார்த்த போது இவன் மாற்றுத்திறனாளியா என்று அனைவரும் அதிர்ச்சியடைந்திருப்பீர்கள். ஆம் நான் மாற்றுத்திறனாளி என்பது தான் உண்மை.

அந்த நிலை தொடர்பில் “பிரகாஸ் எனும் நான்” என்ற தலைப்பிலான இந்தப் பத்தியில் வெளிப்படுத்தவிருக்கிறேன்.

1995, மார்ச் 2ம் திகதி குடும்பத்தில் நான்காவது பிள்ளையாக கொடிகாமத்தில் பிறந்த நான் ஆறு வயது வரையிலும் ஏனைய பிள்ளைகளைப் போன்றே சாதாரணமாக சுறுசுறுப்பாகவும் ஆரோக்கியமான நிலையிலும் இருந்தேன்.

அப்போது, கொடிகாமத்தில் இருந்து இடம்பெயர்ந்து குடும்பத்துடன் உரும்பிராயில் வசித்து வந்த அதேவேளை, நான் உரும்பிராய் ரோமன் கத்தோலிக்க தமிழ்க் கலவன் பாடசாலையில் தரம் ஒன்றில் பயின்றுவந்தேன்.

அவ்வேளை, பாடசாலையில் இடம்பெற்ற இல்ல மெய்வல்லுனர்ப் போட்டியின் போது எனக்கு பாதிப்பு இருப்பது ஆசிரியரால் கவனிக்கப்பட்டது (அதாவது, தவளைப்பாய்ச்சல் அல்லது தாராநடை என்று நினைக்கிறேன் அந்த விளையாட்டின் போது அசாதாரண நிலை உணரப்பட்டது) பின் பெற்றோரிடம் ஆசிரியர் தெரிவிக்க யாழ் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டேன் எனினும் ஆரம்பத்தில் என்ன நோய் என்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கவில்லை.

கிளினிக்கிற்கு தவறாது சென்றுவந்து கொண்டிருந்தேன். நோயின் ஆரம்ப காலம் என்பதனால் பாதிப்பு இருந்தும் நடக்க முடிந்தது அவ்வப்போது கால்கள் மடிந்து விழுந்து பின் எழுந்து நடக்கூடியதாக நோயின் ஆரம்ப கட்டம் இருந்தது. அப்போது நான் ஏழு வயது சிறுவனாக இருந்தேன்.

பின்னர், வைத்தியசாலையில் பல பரிசோதனைகள் செய்யப்பட்டதுடன் பயிற்சிகளும் தந்தனர். இறுதியாக காலில் இருந்து தசைப்பகுதி ஒன்று சத்திரசிகிச்சை மூலம் வெட்டி எடுக்கப்பட்டு கொழும்பிற்கு பரிசோதனைக்காக அனுப்பட்டது (அந்த சந்திரசிகிச்சைக்கு முன் பலூன் போன்றதொரு மயக்கமடைய செய்யும் கருவியை ஊதி மயக்கமடைந்தது தற்போதும் அச்சொட்டாக ஞாபகத்தில் இருக்கிறது)

அந்த பரிசோதனை முடிவில் தான் எனக்கு ஏற்பட்டுள்ள நோய்த் தாக்கமானது தசைத்திறன் குறைபாடு (Muscular Dystrophy) என்று அறிக்கையிட்டு இதற்கு மருந்து கிடையாது வளர வளர நோய்த் தாக்கமும் தீவிரமாகும் என்று வைத்தியர்கள் தெரிவித்தனர்.

அதன்பின்னர், சில வருடங்கள் கிளினிக் சென்று உடற்பயிற்சி செய்ததுடன் வைத்தியசாலைக்கு செல்வதும் கைவிடப்பட்டது. நோயின் தாக்கமும் அதிகரித்துக்கொண்டிருந்தது.

அதுவரை விழுந்து விழுந்து நடந்து கொண்டிருந்த நான், 10 வயது ஆன போது (அப்போது அல்லாரை அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் தரம் ஐந்தில் படித்துக்கொண்டிருந்தேன்) கால்கள் முடங்கிவிட முற்றாக நடக்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டேன்.

அன்றில் இருந்து நடக்கமுடியாதவனாக வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.

பொதுவில் பெரிதாக அறியப்படாத இந்த தசைத்திறன் குறைபாடு நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் இலங்கையில் மட்டுமல்ல உலக நாடுகளிலும் அதிகமாகவே உள்ளனர்.

இதனை தடுக்க அல்லது குணமாக்க எந்த வைத்தியமும் இல்லை என்பதே வேதனைக்குரியது.

மேலும், இந்த நோய் பற்றியும் அதற்கு நான் பெற்ற சிகிச்சைகள் பற்றியும் வோறொரு சந்தரப்பத்தில் உங்களுடன் பகிர்ந்துகொள்வேன்.

“மேல் உள்ள படத்தில் இருப்போது நோயின் ஆரம்பத்தில் விழுந்து எழுந்து நடப்பதை குறிக்கும் காட்சி”

பாகம் 02

தசைத்திறன் குறைபாடு (Muscular Dystrophy) இந்த நோயானது குறிப்பாக ஆண்களை மட்டுமே (90%) தாக்கவல்லது. இந்த நோயில் பல வகைகள் காணப்பட்டாலும் 6 – 7 வயதில் இருந்து தாக்கக்கூடிய நோய் வகையே பலரிடம் காணப்படுகின்றது.

குறிப்பிட்ட வயதில் தாக்க ஆரம்பிக்கும் நோயானது 10 வயதை தாண்டும் போது நோய்த் தாக்கத்திற்கு உள்ளானவரின் முழங்கால் மற்றும் தொடை மூட்டுப் பகுதிகள் நரம்புச்சுருக்கம் காரணமாக முழுமையாகவும், முழங்கை பகுதியளவிலும் முடக்கப்பட்டுவிடும். நானும் தற்போது அவ்நிலையிலேயே வாழ்கிறேன்.

மேலும், இவ்நோயானது 20 வயதை தாண்டுவதற்கு முன்னர் சளி அடைப்பினால் மரணத்தை ஏற்படுத்தக்கூடியதாகும். (இதே நோயால் பாதிக்கப்பட்ட எனது நண்பன் ஒருவன் 18 வயதில் சளி அடைப்பினால் மரணித்திருந்தான்) எனினும் விதிவிலக்காக நோய்த் தாக்கத்தை பொறுத்து 20 வயதை தாண்டியும் சிலரால் வாழமுடியும் (அண்மையில் காலமாகிய எழுத்தாளரும் எனது முகநூல் நண்பருமான அளுத்கமவை சேர்ந்த “இர்பான் ஹபிஸ்” 37 வயது வரை வாழ்ந்திருந்தார்).

வைத்தியசாலையை கைவிட்ட பின்னர், நான் முதலில் சிகிச்சை பெறச்சென்றது உரும்பிராயில் உள்ள அக்கு பஞ்சர் (Acu Puncture) வைத்தியரிடம் தான்.

8 அல்லது 9 வயது என்று நினைக்கிறேன், முழுமையாக நடக்க முடியாத நிலை ஏற்படுவதற்கு முன்னர் ஆரம்பித்த அக்கு பஞ்சர் வைத்தியத்தை கிட்டத்தட்ட 5 ஆண்டுகள் வரையில் பெற்றுக் கொண்டேன் (அக்கு பஞ்சர் வைத்தியமுறையானது நாடி பார்த்து கை, கால் மற்றும் தலையில் நரம்புகளை தூண்டும் வகையில் ஐந்து ஊசிகள் வரையில் குத்தப்படுவதாகும். சில சந்தர்ப்பங்களில் பற்றரி மின்சக்தி மூலம் உடலில் குத்தப்பட்ட ஊசி வாயிலாக உடலில் மின்சாரமும் செலுத்தப்படுவதுண்டு).

அக்கு பஞ்சர் வைத்தியம் எனது நோயையை கட்டுப்படுத்தவாே அல்லது தாக்கத்தை குறைக்கவோ இல்லை . ஆயினும், இந்த நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்த கூடிய சளியை மட்டும் கட்டுப்படுத்தியிருந்தது. இறுதியில் பயணச்சிரமம் காரணமாக அக்கு பஞ்சர் வைத்தியம் கைவிடப்பட்டது.

அக்கு பஞ்சர் வைத்தியத்தின் பின்னர், வடமராட்சியில் எண்ணெய் மசாச் செய்யும் ஆயுர்வேத வைத்தியத்தை சில நாட்கள் பெற்றுக்கொண்டேன். அங்கு கால், கைகளை எண்ணெய் பூசி உருவி பல முறையில் வைத்தியம் செய்தனர்.

ஆரம்பத்தில் எண்ணெய் பூசி கால்களை இழுத்து உருவும் போது ஏற்படும் வலிகளை முடிந்தவரை தாங்கிக் கொண்டேன் (நடக்க வேண்டும், பலன் கிடைக்கலாம் என்பதால்) ஆனால் பின் நாட்களில் தொடர்ந்தும் அந்த வைத்தியத்தை செய்யும் போது வலிகளை தாங்க முடியவில்லை.
அதன்காரணமாக அதனையும் கைவிட்டோம். பின்னர் மூளாயில் அதேமுறையிலான மற்றுமொரு வைத்தியரிடம் சென்ற போது, அங்கு முதல் நாளிலேயே எனது கை, கால்களை கதறக்கதற கடுமையாக உருவி இழுத்து எண்ணெய் பூசினார்கள்.

அந்த கடுமையான செயலின் பாதிப்பாக “இனிமேல் அங்கு செல்வது என்றால் தற்கொலை செய்வேன்” என்று வீட்டில் எனது எதிர்ப்பை காண்பித்தேன்.

அத்துடன் மறுநாள் காய்ச்சலும் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து அதுவும் கைவிடப்பட்டது. குறித்த சம்பவத்தின் பின்னர் எண்ணெய் பூசும் வைத்தியத்திற்கு செல்ல வேண்டும் என்று வீட்டில் கூறினால் அனுபவித்த வலிகளை நினைத்து செல்ல மறுத்தாலும், அப்பா மீதிருந்த பயம் காரணமாக அதன் பின்னரும் எண்ணெய் பூசும் வைத்தியர்கள் பலரிடம் சிகிச்சை பெற்றுவந்தேன்.

கைதடி ஆயுர்வேத வைத்தியசாலையில் கிட்டத்தட்ட 40 நாட்கள் தங்கியிருந்து கண்ணீர் விட்டு அழுதும் வலிகளை தாக்கியவாறும் மேற்குறிப்பிட்ட முறையிலான எண்ணெய் பூசும் சிகிச்சையை பெற்றுக் கொண்டேன்.

அதன்பின்னரும், கேள்விப்படும் இடமெல்லாம் பல்வேறு ஆயுர்வேத வைத்தியர்களிடம் சென்றுகொண்டு தான் இருந்தேன்.

காலம் கடந்து செல்லச்செல்ல அதுபோன்ற சிகிச்சைகள் பயனற்றது என்பதை அப்பாவும் உணர்ந்து கொண்டார். நானும் அதுவரை பெற்ற சிகிச்சைகளின் அனுபவம் மற்றும் எனது நோய் பற்றிய தேடல் மூலமும் அறிந்ததை வைத்து எண்ணெய் பூசுவது எல்லாம் பயனற்றது என்று புறக்கணித்துக் கொண்டேன்.

ஆனாலும், “இப்படியொரு இடத்தில் இந்த வைத்தியம் நடக்குது சிலரது நோய்கள் மாறியுள்ளது உங்கள் மகனையும் கொண்டுபோய் பாருங்க” என்று கூறுபவர்களுக்காக, மனம் கேட்காமல் அங்கு கொண்டு செல்வார்கள்.

எனவே, அத்தகைய வைத்தியத்தை அதன் பின்னரும் சில இடங்களில் பெற்றுக் கொண்டேன் வழக்கம் போல் அனைத்தும் பயனற்றதாகவே இருந்தது.

இறுதியாக, இந்தியாவில் இருந்து ஒருவர் யாழ்ப்பாணம் வந்துள்ளதாக அறிந்து அங்கு சென்றபோது அவரும் எண்ணை பூசுபவராக இருந்தார். முதல் நாளிலேயே எண்ணெய்யை பூசி கால்களை இழுத்ததால் பொறுமையிழந்த நான் “இதை தான் பல இடங்களில் செய்தார்கள், எந்த பயனுமில்லை வலிக்காமல் செய்வது எண்டா செய்யுங்க” என்று திட்டிவிட்டேன்.

இதேவேளை, பேய் ஓட்டுபவர்களிடமும் பழக்கமானவர்களின் தொல்லையால் சென்றதுமுண்டு அங்கு எனது நிலைக்கு பேய், சாபம் மற்றும் செய்வினை தான் காரணம் என்று கிறுக்குத்தனமாக கூறினார்கள்.

இவற்றுக்கு முன்னதாக குணமாக்கல் வழிபாடு செய்யும் அருட்தந்தை ஒருவரிடம் சென்ற போது அவர், இது நோய் தான் கடவுளை பிராத்தியுங்கள் எனக் குறிப்பிட்டார்.

இதேபோல், கிறிஸ்தவ மதச் சபைகளுக்கும் பழக்கமானவர்கள் விடாப்பிடியாக நின்று அழைத்துச் சென்றனர் அங்கும் ஜெபிக்கும் பாஸ்டர்கள் “சாத்தானின் கட்டுக்களை உடைத்து குணமாக்குவோம்” என்று பஞ் டயலொக் பேசினார்கள்.

சிலர் எழுந்து நடந்தால் என்ன செய்வீர்கள் என்று மதம் மாறுவதை எதிர்பார்த்து கேள்வியும் கேட்டதுண்டு.

மேற்குறிப்பிட்டவற்றில் பல சம்பவங்கள் 18 வயதுக்கு கீழ் இருந்த போது இடம்பெற்றது. அப்பா மீதுள்ள பயம் காரணமாக அழைக்கும் இடமெல்லாம் செல்ல வேண்டியிருந்தது.

ஆனால், இப்போது அனுபவங்களின் மூலம், அனைத்து சிகிச்சைகளும் வெறுத்துவிட்டதாலும் எங்கு செல்வது என்றாலும் செல்லுமிடத்தை அறிந்து கொண்டே செல்ல சம்மதிக்கிறேன்.

எது எப்படியோ, அறிந்த இடம்மெல்லாம் சிகிச்சைக்கு சென்றுவிட்டதால் இப்போது எங்கும் செல்வதில்லை. இப்பொழுது யாராவது, அங்க போனால் நல்லது என்று எண்ணெய் பூசுபவர்கள் பற்றி குறிப்பிட்டால் கோபம்தான் ஏற்படும்.

இவ்வாறு பலவலிகள் நிறைந்த அனுபவங்கள் என்னுள் இருந்தாலும், இவ்முகநூலுக்கு வந்ததன் மூலமாக அவ்வலிகளை மறந்து ஊடகவியல் திறமையை வளர்த்து எனக்கென்று ஒரு அடையாளத்தை பெற்றுக் கொண்டிருக்கிறேன்.

பாகம் 03

மாற்றுத்திறனாளி என்பதால் தான் என்னமோ, வாழ்க்கையில் எவ்வித குறிக்கோளும் இல்லாமல் இருந்த நான், இணையத்தில் உலாவத் தொடங்கி முகநூலுக்குள் பிரவேசித்த பின்னர் எனக்குள் மறைந்துகிடந்த ஊடகத்துறை திறமை வெளிப்பட ஆரம்பித்தது. அது, இல்லையென்றால் இன்று இப்படி என்னை பற்றி எழுதும் நிலைகூட கிடைத்திருக்காது என்பதை என் கடந்த காலம் எனக்கு கூறுகின்றது.

2001 – 2002 காலப்பகுதியில் என்று நினைக்கிறேன். நோய்த் (தசைத்திறன் குறைபாடு) தாக்கத்தை கண்டறியும்போது உரும்பிராய் ரோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையில் தரம் இரண்டில் படித்துக் கொண்டிருந்த நான், பின்னர் சொந்த ஊரில் அல்லாரை அரசினர் தமிழ் வித்தியாலயத்தில் தரம் மூன்று முதல் படிக்க ஆரம்பித்தேன்.

அப்போது, விழுந்து, எழுந்து நடந்து கொண்டிருந்த காலம் அது. அப்படி விழுந்து, காயங்களுக்கு உள்ளாகி தரம் ஐந்து வரை கற்றேன்.

2005-ம் ஆண்டில் 5-ம் தரப்புலமைப்பரிசில் பரீட்சையை மீசாலை வீரசிங்கம் மகா வித்தியாலயத்தில் எழுதியதுடன் முழுமையாக நடக்க முடியாமல் போனது.

கல்வியையும் ஐந்தாம் தரத்துடன் முடித்துக் கொண்டேன்.
அதன்பின்னர், எனது பொழுது போக்கு பத்திரிகை படித்தல், வானொலி கேட்டல், உறவினர்கள் வீட்டிற்கு சென்று படமும், கிரிக்கெட்டும் பார்ப்பதாகவே இருந்தது.

அதுமட்டுமல்ல அம்மாவிடம் இருந்து கற்றுக் கொண்டதை வைத்து கதிரை பின்னுவது, நீத்துப்பெட்டி பின்னல் என்று சிறிய கைவேலைகளை செய்வேன்.

அதன்மூலம் சிறிய வருமானத்தையும் பெற்றுள்ளேன். கைகளின் தைரியம் (இயக்கம்) குறைந்துபோனதுடன் அதனை கைவிட்டேன்.

பின் நாட்களில் கணினி தொடர்பான ஆரம்ப கல்வியை கற்றிருந்ததால் கணினியுடன் பொழுதுபோனது. அதில், அண்ணனை பார்த்து புகைப்பட வடிவமைப்பையும் (Photo Designing) கற்றுக்கொண்டேன்.

வெளிநாட்டுக்கு சென்றிருந்த அண்ணனுடன் ஸ்கைப் மூலம் பேசுவதற்கு இணையத்தை பயன்படுத்திய சந்தர்ப்பத்தில் தான் அண்ணனின் நண்பர் ஒருவர் எனக்கு 2012ம் ஆண்டளவில் முகநூலை திறந்து தந்திருந்தார்.

அதன்மூலம், பயன்படுத்த தெரியாத முகநூலையும் கற்றுக் கொண்டேன். எனவே, முகநூலில் என்ன செய்வது என்று தெரியாமல் இணையத்தில் நான் படித்த செய்திகளை அவ்வாறே எனது முகநூலில் பதிவிட ஆரம்பித்தேன்.

பின்னாட்களில், அதுவே பயனுள்ளதாக தெரிந்தது. அவ்வாறு செய்திகளை படிப்பதில் பலருக்கும் ஆர்வம் இருந்தது. எனவே, அதனையே முழுமையாக செய்ய ஆரம்பித்தேன். பலரும், என்னை செய்தியாளராக நோக்கினார்கள்.

அதன்மூலம், என்னை நானாக ஊடகவியலாளன் என்று முகநூலில் அடையாளப்படுத்திக் கொண்டேன். அவ்வாறு அடையாளப்படுத்திக் கொண்ட பின்னர் அதனை முழுமையாக நிரூபித்துக்காட்ட வேண்டிய ஆர்வமும் கட்டாயமும் ஏற்பட்டதால் ஊடகவியல் திறமையை முகநூலில் அறிமுகமாகிய ஏனைய ஊடகவியலாளர்களை பார்த்து வளர்த்துக் கொண்டேன்.

அதேபோல், செய்திகள் மட்டுமல்லாது கட்டுரைகளும் என்னை ஊடகவியலாளனாக வளர்த்துவிடுவதில் முக்கிய பங்குவகித்தது. அந்தக், கட்டுரை எழுதும் ஆர்வத்தை எனக்குள் விதைத்தது மலையகம் என்பதில் நான் பெருமை கொள்கிறேன்.

ஏனெனில் மலையக மக்களின் பிரச்சினைகளை ஊடகங்களிலும், முகநூல் நண்பர்கள் மூலமும் அறிந்த போது என்னையும் அறியாமல் அவர்களுக்காக குரல் கொடுக்க வேண்டும் என்ற ஒரு அவா எனக்குள் ஏற்பட்டது. மலையக மக்களின் பிரச்சனைகளுக்காக வடக்கு, கிழக்கில் பெரிதாக குரல் எழும்புவதில்லை என்பது கூட அதற்கு காரணமாக இருக்கலாம்.

எனவே, மலையக மக்களின் பிரச்சினைகளை செய்தியாக எழுதுவது மட்டுமல்லாது எனது கருத்தையும் முன்வைக்க அவற்றை கட்டுரையாக முகநூலில் எழுத ஆரம்பித்தேன். அந்த முயற்சி தான் எனக்கு கட்டுரை எழுதும் திறமையை வளர்த்துவிட்டது.

அப்படி வளர்த்துக்கொண்ட எனது திறமைக்கு தானாகவே இணைய ஊடகத்தில் பணிபுரியும் வாய்ப்புக்களும், பத்திரிகை கட்டுரை எழுதும் இடமும் கிடைக்கப்பெற்றது.

இவை, அனைத்திற்கும் முக்கிய அடித்தளமாக அமைந்திருப்பது இவ்முகநூல் தான். அதற்காக மார்க் ஜுகர்பேர்க்கிற்கு நன்றி கூறு வேண்டும்.

அதேபோல், எனது வலிகளை மறக்கும் உலகமாகவும் முகநூலே காணப்படுகின்றது. என்னை விரும்பும் நண்பர்களும், நண்பிகளும் முகநூலில் கிடைத்தனர்.

அதற்குமேலாக, இருதலை காதல் மற்றும் ஒருதலை காதல் என்று இரண்டு காதலை செய்யும் வாய்ப்பும் அமைந்திருந்தது. அதில் ஏமாற்றங்கள் கிடைத்தபோதிலும் காதல் அனுபவம் எனக்கு கிடைத்ததில் பெருமிதமடைகிறேன்.

என்னைப்பற்றி வெளிப்படுத்தும் வரையிலும் முகநூல் மூலமாக நண்பர்களாகிய பலரும் என்னை அதிகம் படித்தவன், ஊடகம் படித்த ஊடகவியலாளன் என்று தான் எண்ணிக்கொண்டனர்.

எனினும், என்னை வெளிப்படுத்திய பின்னர் அனைவரும் ஆச்சரியமடைந்ததுடன் ஐந்தாம் ஆண்டு மட்டும் படித்தேன் என்பதை நம்பக்கூட மறுத்தனர்.

எதெப்படியோ , நான் படித்தது ஐந்தாம் ஆண்டு வரை தான் என்பதை இங்கும் வெளிப்படுத்தியிருக்கின்றேன். ஐந்தாம் ஆண்டு மட்டும் கல்விகற்ற நான் ஊடகவியலாளராக மாறியது அல்லது வளர்ந்ததையிட்டு பெருமையடைகிறேன்.

அதிகம் படிக்காமல் என்னுள் இருக்கும் அறிவைக் கொண்டு என் திறமைகளை நானே ஒவ்வொன்றாக வளர்த்துக் கொண்டதை “எவரும் கற்றுக் கொடுக்காமல், நானே அவற்றை பார்த்து கற்றேன், திறமையை வளர்த்தேன்” என்ற மனநிலையில் சுயபெருமையாக மகிழ்ச்சி கொள்(கிறே)வேன்.

இது, என் போன்ற மாற்றுத்திறனாளிகள் பலரிடமும் தானாக அமையக்கூடிய இயற்கை கொடையாகும். அதனாலேயே, நாம் அனைவரும் மாற்றுத் திறனாளிகளாக பெயர் பெற்றுள்ளோம்.

இது இவ்வாறிருக்க, கடந்த ஆண்டின் ஆரம்பத்தில் என்னைப்பற்றி வெளிப்படுத்த நான் எண்ணிய போதிலும் அதற்கு நல்ல சந்தர்ப்பம் அமையாமல் அது தள்ளிப்போய்க்கொண்டிருந்தது.

அதற்குரிய வாய்ப்பை அமைக்க உந்துதலாக இருந்தவர் எனக்கு முகநூல் மூலம் கிடைத்த நெருங்கிய நண்பர் ஒருவரே. தமது பிரச்சினைகளுக்காக போராடும் மக்களுக்கு ஆதரவாக கவனயீர்ப்பு போராட்டங்களை எவர் மூலமாவது செய்ய வேண்டும் எனும் ஆர்வம் என்னிடம் அதிகம் இருந்தது.

எனினும், அதில் நானும் பங்குகொள்ள வேண்டும் என்ற எண்ணம் இருந்ததில்லை. காரணம், நான் சென்று வருவது சிரமம் என்பதால். ஆனால், குறித்த நண்பர் என்னை பற்றி அனைத்தும் தெரிந்திருந்தும் என்னை கோபப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் அடிக்கடி என்னை சீண்டிப்பார்ப்பார்.

அவரது அந்த சீண்டலினால் ஏற்பட்ட சிந்தனைகள் நிறைந்த கோபம் எனக்குள் ஒரு தைரியத்தை ஏற்படுத்தியது. எனவே, தான் அவரே எனக்கு உந்துதலாக இருந்தார் எனக் கூறுகிறேன்.

“ஆழ்மனதில் இருந்து எழும் சிந்தனைகள் நிறைந்த கோபம், மனிதனுக்கான செயல் ஆயுதம்” என்பதை இதனூடாக நான் கூறிக்கொள்கிறேன்.

மலையக மக்களுக்கான சம்பளப் போராட்டம் மீண்டும் கடந்த ஆண்டு வலுப்பெற்ற போது, நான், யாழில் போராட்டம் செய்ய வேண்டும் என்று நண்பர்கள் சிலரை கேட்டிருந்தேன்.

ஆனாலும் அவர்களுக்கு நேரம் கிடைக்கவில்லை என்பதால் அது கைகூடவில்லை. ஆயினும், வேறு சிலர் மலையக மக்களுக்காக போராட்ட அழைப்பு விடுத்து குழு ஒன்றில் என்னை இணைத்தனர்.

அதில் நானும் ஆவலுடன் பங்கெடுத்து போராட்டத்திற்காக முழுமூச்சுடன் செயற்பட்டு கலந்துகொண்டேன். அதன்பின்னர் பொதுவில் என்னை யார் என்று வெளிக்காட்டிக் கொண்டதுடன் என்னை பற்றியும் “பிரகாஸ் எனும் நான்” என்ற இத்தொடரின் மூலம் முழுமையாக வெளிப்படுத்தியிருக்கின்றேன்.

இந்தத் தொடரின் மூலம் எனக்குள் இத்தனை மனத்தைரியம் இருக்கின்றதா என்பதை நண்பர்களின் மெய்சிலிர்ப்பு மற்றும் பாராட்டுக் கருத்துக்கள் மூலம் முழுமையாக அறிந்து கொண்டேன்.

எனவே, மாற்றுத்திறனாளியான நான், என் செயல் மற்றையவர்களுக்கு முன்னுதாரணமாக இருக்கும் என்று பலர் கூறியதாலும், இதனை நூல் மூலம் வெளியிட வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டதால், இத்தொடரின் தலைப்பைக் கொண்டு என்னைப்பற்றி “சுயசரிதை” நூல் ஒன்றை எழுதி வெளியிட அதிகம் ஆர்வத்துடன் இருக்கின்றேன்.

  • முற்றும் –

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *