
கொரோனா வைரஸ் பரவல் அச்சுறுத்தல் காரணமாக நாடளாவிய ரீதியில் ஏற்கனவே விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் படிப்படியாகத் தளர்த்தப்பட்டுவரும் நிலையில், முஸ்லிம் பள்ளிவாசல்களில் இடம்பெறும் மதவழிபாடுகள் மற்றும் தொழுகைகளின்போது கடைப்பிடிக்கப்படவேண்டிய 23 சுகாதாரப்பாதுகாப்பு வழிகாட்டல்கள் சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளன.
சுகாதாரசேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட மருத்துவ நிபுணர் அசேல குணவர்தனவின் கையெழுத்துடன் வெளியிடப்பட்டிருக்கும் சுகாதாரப் பாதுகாப்பு வழிகாட்டல்களில் கூறப்பட்டுள்ள விடயங்கள் வருமாறு:
- பள்ளிவாசல்களின் உட்புறம், நுழைவாயில், காத்திருக்கும் பகுதி, தொழுகை நடாத்தும் இடம் ஆகியவற்றில் அதிகளவானோர் கூட்டமாகக் கூடுவது தவிர்க்கப்பட வேண்டும். அதேவேளை அனைவராலும் சமூக இடைவெளி பேணப்படுவதை உறுதிசெய்யக்கூடியவகையில் மேற்படி இடங்களில் குறைந்தபட்சம் ஒரு மீற்றர் இடைவெளியில் அடையாளமிடப்பட்டிருக்க வேண்டும்.
- தொழுகை நேரத்தில் பள்ளிவாசலுக்குள் ஒருவேளையில் அனுமதிக்கப்படக்கூடிய நபர்களின் எண்ணிக்கையானது, குறித்த பள்ளிவாசல்களில் பேணப்படக்கூடிய சமூக இடைவெளியின் அடிப்படையில் தீர்மானிக்கப்பட வேண்டும். இதேவேளை ஒரேநேரத்தில் பள்ளிவாசல்களுக்குள் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கையானது நூறு பேருக்கு மிகைப்படாதிருப்பதை உறுதிப்படுத்துவது அவசியமாகும்.
- மேலும் தொழுகை நடைபெறும்போது அதில் கலந்துகொள்ளும் நபர்களுக்கிடையில் கட்டாயமாக ஒரு மீற்றர் இடைவெளி பேணப்படவேண்டும்.
- தொழுகையில் ஈடுபடுவதற்காகப் பள்ளிவாசல்களுக்கு வருகைதருவோர் தத்தமது வீடுகளிலிருந்து அதற்குரிய நிலவிரிப்புக்களை எடுத்துவரவேண்டும்.
- தொழுகை முடிவடைந்ததும் ஒருவரை ஒருவர் கடந்து செல்ல வேண்டிய அவசியமேற்படாத வகையில் தொழுகை மண்டபங்களின் இரு பக்கங்களிலும் போதுமான இடைவெளி பேணப்படவேண்டும்.
- மதவழிபாடுகளுக்காக பள்ளிவாசல்களுக்கு வருகைதரும் அனைவரும் உரியவாறு கட்டாயமாக முகக்கவசங்களை அணிந்திருக்கவேண்டும்.
- பள்ளிவாசல்களின் நுழைவாயிலுக்கு அண்மையில் கைகளைக் கழுவுவதற்கு அவசியமான வசதிகள் (நீர், திரவ சவர்க்காரம்) தயார் நிலையில் வைக்கப்பட்டிருக்க வேண்டும்.
- தொழுகைகளுக்காக வருகை தருவோர் கைகொடுத்தல் உள்ளடங்கலாக உடலியல் ரீதியில் நெருக்கத்தைப் பேணக்கூடிய வகையிலான செயற்பாடுகளைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.
- பள்ளிவாசல்களுக்குச் செல்பவர்கள் கையடக்கத் தொலைபேசி, பேனா உள்ளிட்ட தனிப்பட்ட பொருள்களைப் பரிமாற்றிக் கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.
- பள்ளிவாசல்களில் வைக்கப்பட்டிருக்கும் குர்-ஆன் உள்ளிட்ட பொதுவாக அனைவரும் பயன்படுத்தக்கூடிய பொருள்களைப் பயன்படுத்தியதன் பின்னர் சனிட்டைசர் மூலம் கைகளைத் தூய்மைப்படுத்திக்கொள்ளவேண்டும்.
- பள்ளிவாசல்களுக்குள் ஏதேனும் பழச்சாறு அல்லது உணவுப்பொருள்களை உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.
- காய்ச்சல், தடிமன், இருமல், தொண்டைவலி உள்ளிட்ட கொவிட் வைரஸ் தொற்றுக்குரிய அறிகுறிகள் காணப்படுபவர்கள் பள்ளிவாசல்களுக்குச் செல்வதைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.
- பள்ளிவாசல்களில் போதியளவு காற்றோட்டம் காணப்படுவதனை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.
- ஒவ்வொரு தொழுகை நேரம் முடிவடைந்ததன் பின்னரும் தொற்று நீக்கிகளைப் பயன்படுத்தி தொழுகை மண்டபங்களை சுத்தப்படுத்த வேண்டும்
– என்று சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்ட சுகாதாரப் பாதுகாப்பு வழிகாட்டல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.