பெண்கள், சிறுவர்களுக்கு எதிராக அதிகரிக்கும் இணையவழி பாலியல் குற்றங்கள்!

கொரோனா முடக்க காலத்தில் இலங்கையில் பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான இணைய வழி பாலியல் குற்றச் சம்பவங்கள் 300 வீதமாக அதிகரித்துள்ளன என்று பெண்கள் உரிமை அமைப்புகள் தெரிவித்துள்ளன.

கடந்த வருடம் முதல் கொரோனா தொற்று காலத்தில் பல சந்தர்ப்பங்களில் நாடு முடக்கப்பட்டிருந்தது.

இக்காலகட்டத்திலேயே இந்த குற்றச் சம்பவங்கள் பிரதான இடத்தை வகித்தன என அந்த அமைப்புகள் சுட்டிக்காட்டியுள்ளன.

இது தொடர்பாக பெண்கள் அபிவிருத்தி நிதியத்தின் ஏற்பாட்டாளரான ஈ.எம்.பண்டார மெனிக்கே தகவல் தெரிவித்ததாவது,

இக்காலகட்டத்தில் பெண்களுக்கு எதிரான பொதுவான துன்புறுத்தல்கள் 33 வீதத்தால் அதிகரித்திருக்கும் இதேவேளை வீட்டு வன்முறை சம்பவங்களும் அதிகரித்துள்ளன.

இணையவழி கற்றல் நடவடிக்கைகள் மூலம் பாடசாலை மாணவர்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்கள் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளன என்கிறார்.

இதேவேளை சுதந்திர வர்த்தக வலயங்களில் உள்ள ஆடைத்தொழிற்சாலைகளில் கடமை புரியும் பெண்களின் நிலை மிக மோசமானதாக உள்ளதாக, இலங்கை தாய்மார்கள் மற்றும் மகள்மார் என்ற அமைப்பின் இணைப்பாளர் பத்மினி வீரசூரிய தெரிவித்துள்ளார்.

தொற்று காலத்தில் சில ஆடைத் தொழிற்சாலை உரிமையாளர்கள் பணியாற்றும் பெண்களுக்கு ஓய்வின்றி வேலை வாங்கியுள்ளனர்.

சில தொழிற்சாலைகள் கிருமி நீக்கம் செய்யப்படவில்லை. இதுவும் பெண்களுக்கு எதிரான துன்புறுத்தல்களே , ஆகவே இவ்வாறான சம்பவங்களை தடுத்து நிறுத்துவதற்கு ஒரு ஒழுங்கு முறை அமைப்பு அவசியம் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *