மின் கட்டண நிலுவை காரணமாக மட்டக்குளி பகுதியிலுள்ள வீடுகளின் மின் துண்டிப்பு!

மட்டக்குளி கிராமசேவகர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளிலுள்ள வீடுகளுக்கான மின்வழங்கல் துண்டிக்கப்பட்டுள்ளதனால் அப்பகுதி மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

கொரோனா வைரஸ் பரவலைத் தொடர்ந்து வருமானத்தை ஈட்டுவதில் ஏற்பட்ட சிக்கல் நிலையால் மின் கட்டணத்தை செலுத்தத் தவறியிருந்த நிலையிலேயே மேற்படி மின் துடிப்பு இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில் மேற்படி நிலுவைத் தொகையினை சலுகை அடிப்படையில் செலுத்துவதற்கு உரிய திட்டங்களை அரசாங்கம் அறிமுகப்படுத்த வேண்டும் என குறித்த பிரதேச வாசிகள் வலியுறுத்தியிருக்கின்றனர்.

இப்பிரச்சினை தொடர்பில் உரிய அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வடகொழும்பு இணைப்பாளரும் கொழும்பு மாநகரசபையின் உறுப்பினருமான ராஜு பாஸ்கரானிடம் வினவியபோது அவர் குறிப்பிட்டதாவது,

நாட்டில் ஏற்பட்ட கொரோனா வைரஸ் பரவல் காரணமாகப் பலர் தமது வேலைவாய்ப்புக்களை இழந்திருப்பதுடன் தமக்கான வருமானத்தையும் இழந்து பெரும் நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்து வருகின்றனர்.

இவ்வாறானதொரு சூழ்நிலையில் மட்டக்குளி கிராமசேவகர் பிரிவிற்குட்பட்ட ஃபெர்குஷன் வீதி, ஜுபிலி வீதி, ரொட்ரிகோ இடம், சேர்ச் வீதி, சென் மேரிஸ் வீதி ஆகிய இடங்களில் வசிப்பவர்களில் மின்கட்டணங்களை செலுத்தாதவர்களின் வீடுகளுக்கான மின்வழங்கல் கடந்த நான்கு தினங்களுக்கு முன்னர் துண்டிக்கப்பட்டது.

இதுகுறித்து உரிய அதிகாரிகளிடம் வினவியபோது, 50 ஆயிரம் ரூபாவுக்கும் மேற்பட்ட தொகையிலான மின்கட்டணத்தை நிலுவையாகக் கொண்ட வீடுகளுக்கான மின்வழங்கல் மாத்திரமே துண்டிக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்தனர்.

எனவே இதுகுறித்து உரிய அதிகாரிகளிடம் கலந்துரையாடியதன் பின்னர் 50 – 60 சதவீதமான மின்கட்டணத்தைச் செலுத்தியுள்ள வீடுகளுக்கும், மின்கட்டணத்தை செலுத்தமுடியாத மிகவும் பொருண்மியம் நவிவடைந்த நிலையில் இருக்கும் வீடுகளுக்கும் மாத்திரம் மறுநாள் மின்சாரம் வழங்கப்பட்டது -என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *