இலங்கை கடலோர காவல்படை, இலங்கை கடற்படை மற்றும் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்துடன் இணைந்து, வென்னப்புவ, போலவத்த பகுதியில் நேற்று (02) நடத்திய சிறப்பு சோதனையில் 900 கிலோ கிராமுக்கும் அதிகம் எடையுள்ள கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.
மீட்கப்பட்ட கேரள கஞ்சாவின் பெறுமதியானது 202 மில்லியன் ரூபாவுக்கும் அதிகம் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கை கடலோர காவல்படைக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், வென்னப்புவ, போலவத்த பகுதியில் சந்தேகத்திற்கிடமாக பயணித்த கெப் வண்டியொன்றை மடக்கி முன்னெடுக்கப்பட்ட கூட்டு சோதனையின் போது இந்த மீட்பு இடம்பெற்றுள்ளது.
கேரள கஞ்சாவுக்கு மேலதிகமாக இரண்டு வெளிநாட்டு கைத்துப்பாக்கிகள், நான்கு மெகசின்கள், 40 தோட்டாக்கள் என்பவற்றுடன் மூன்று சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டனர்.
அத்துடன், கடத்தல் நடவடிக்கைக்காக அவர்கள் பயன்படுத்திய கெப் வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது.
சந்தேக நபர்களிடமிருந்து வெளிப்படுத்தப்பட்ட மேலதிக தகவல்களின் அடிப்படையில், இந்த மோசடியில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் மற்றொரு நபர், மோட்டார் வாகனத்துடன் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 44 முதல் 51 வயதுக்குட்பட்ட உலுக்குளம், போத்தானேகம மற்றும் அனுராதபுரம், இஹலகம ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டனர்.
கைதான சந்தேக நபர்கள், கேரள கஞ்சா, கைத்துப்பாக்கிகள், மெகசின்கள், தோட்டாக்கள் மற்றும் போக்குவரத்துக்காக பயன்படுத்தப்பட்ட வாகனங்கள் என்பன மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கொழும்பு போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டன.