யாழ் தென்மராட்சியில் நிலத்தடி நீரை உறிஞ்சும் செயற்பாடுகளோடு அமைக்கப்படும் உப்பளத்தினால் ஆபத்து!

யாழ் தென்மராட்சியின் சாவகச்சேரி பிரதேச சபைக்கு உட்பட்ட தனங்கிளப்பு அறுகுவெளி பகுதியில் மீண்டும் உப்பளம் அமைக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

கடந்த சில வருடங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்டு கைவிடப்பட்ட நிலையில் இருந்த உப்பளமே மீண்டும் திடீரென இயங்கு நிலைக்கு செயற்படுத்தப்படுகின்றது.

இந்நிலையில் குறித்த உப்பளத்தினால் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு விரோதமான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாக அறிந்த சாவகச்சேரி பிரதேச சபை உறுப்பினர் செ.மயூரன், சாவகச்சேரி நகரசபை உபதவிசாளரோடு உப்பளத்திற்கு சென்று நிலைமைகளை ஆராய்ந்துள்ளார்.

இதன்போதே ஆழ்துளை குழாய் கிணறுகள் மூலம் உப்பு உற்பத்தி பாத்திகளுக்கு நீர் இறைப்பதனை கண்டுபிடித்தனர்.

அங்கு அமைக்கப்பட்டுள்ள சுமார் 5 குழாய் கிணறுகளில் நீர் எடுக்கப்பட்டு வருவதுகண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மேலும், உப்பளம் அமைப்பதற்கு சாவகச்சேரி பிரதேச சபையின் அனுமதியும் பெறப்படவில்லை என்பதும் தெரியவந்துள்ளது.

இதேவேளை, அறுகுவெளி கடல் நீரேரியில் இருந்தே உப்பு உற்பத்திக்கான நீர் எடுக்க வேண்டிய நிலையில் அதற்கான ஏற்பாடுகள் எதுவும் செய்யாமல் சட்டவிரோத குழாய்கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனால் தென்மராட்சியின் நிலத்தடி நீர் வளம் பாதிக்கக்கூடிய அபாயகரமான நிலை ஏற்பட்டுள்ளதால் உரிய அதிகாரிகள் இதனை உடனடியாக தடுத்து நிறுத்துமாறு பிரதேச சபை உறுப்பினர் செ.மயூரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *