புத்தளத்தில் புனரமைக்கப்பட்ட டச்சுப்பாலம் திறந்துவைப்பு!

புத்தளம் மாவட்டத்தின் மதுரங்குளி – தொடுவா பிரதான வீதியின் கடையாமோட்டை (டச்சுப் பாலம்) பகுதியில் உள்ள புதிதாக நிர்மாணிக்கப்பட்ட பாலம் மக்கள் பாவனைக்காக நேற்று (07) உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.

மதுரங்குளி பிரதேசத்தில்  குறித்த பாலம் நீண்ட காலமாக உடைந்து பழுதடைந்து காணப்பட்டமையினால் இந்த பாலத்தின் ஊடாக நாளாந்தம் போக்குவரத்து மேற்கொள்ளும் ஆயிரக்கணக்கான பொதுமக்களும், நூற்றுக்கணக்கான வாகன சாரதிகளும் பெரிதும் சிரமத்தை எதிர்கொண்டனர். 

இந்த நிலையில், குறித்த பாலத்தின் நிர்மாணப்பணிகள் முன்னைய அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட போதிலும், அவை புனரமைக்கப்படாமல் இடை நிறுத்தப்பட்டிருந்தது. எனினும், இந்த வருடம் மார்ச் மாதம் முதல் பாலத்தின் புனரமைப்பு பணிகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டது.

30 மீற்றர் நீளமும், 9.2 மீற்றர் அகலமும் கொண்ட இந்தப் பாலத்தின் நிர்மாணப் பணிகளுக்காக பொது நிர்வாக , மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் ஊடாக நெதர்லாந்து அரசாங்கம் 191 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்திருந்த நிலையில் குறித்த பாலம் புனரமைக்கப்பட்டு மக்கள் பாவனைக்காக கையளிக்கப்பட்டது. 

புதிய பாலத்தின் திறப்பு விழா நிகழ்வில், தேசிய மக்கள் சக்தியின் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான கயன் ஜானக, முஹம்மது பைஸல், புத்தளம் மாவட்ட செயலாளர் எச்.எம்.எஸ்.பி.ஹேரத், கற்பிட்டி பிரதேச சபைத் தலைவர் ஏ.எஸ்.எம். ரிகாஸ், பிரதித் தலைவர் சமன் குமார, மதுரங்குளி வர்த்தக சங்கத் தலைவர் எம்.எஸ்.ரி.அமான் , மதுரங்குளி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் காமினி விக்ரமசிங்க உட்பட புத்தளம், கற்பிட்டி ஆகிய பிரதேச சபைகளின் ஆளும் கட்சி உறுப்பினர்கள், பொறியியலாளர்கள், பொதுமக்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *