ஓமந்தை காணியை அபகரித்து விகாரை கட்டும் முயற்சியில் பொலிஸார்; மக்கள் ஒன்றுகூடியதால் பதற்றம்

 

வவுனியா – ஓமந்தை பொலிஸ் நிலையத்துக்கு அருகாமையில் உள்ள காணிக்குள் ஓமந்தை பொலிஸார் அத்துமீறி சென்று துப்புரவு செய்து அதில் விகாரை அமைக்க மேற்கொண்ட முயற்சி இன்று மதியம்  அப்பகுதியில் கூடியவர்களினால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

ஓமந்தையின் ஏ9 வீதியில் பொலிஸ் நிலையத்திற்கு அருகாமையில் தனியார் உரிமை கோரிவரும் அரச காணி ஒன்றினை பொலிஸார் துப்புரவு செய்து, அதனை சுற்றி வேலி அமைக்க முற்பட்டவேளை, அங்கு கூடிய அரசியல்வாதிகள், பொதுமக்களினால் நிறுத்தப்பட்டதோடு விகாரை அமைக்கும் முயற்சியும் நிறுத்தப்பட்டுள்ளது.

குறித்த காணி தொடர்பில் கடந்த பிரதேச செயலக ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் பிரஸ்தாபிக்கப்பட்ட நிலையில் அதனை பொலிஸார் அபகரிக்கும் செயற்பாட்டை நிறுத்துமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. 

இந்நிலையில் ஓமந்தை பொலிஸாருக்கு குறித்த அரச காணியில் எவ்விதமான அபிவிருத்திப் பணிகளையும் மேற்கொள்ள வேண்டாம் என பிரதேச செயலாளரினால் எழுத்து மூலமான கடிதமும் அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.

எனினும் பொலிஸார் அதனை சுத்தம் செய்து அதனை சுற்றி வேலி அமைக்கும் பணியில் இன்று ஈடுபட்டிருந்தனர். 

இதனை அடுத்து அங்கு கூடிய வவுனியா மாநகர சபை தலைவர் சு. காண்டீபன், வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை தலைவர் பி. பாலேந்திரன், வவுனியா வடக்கு பிரதேச சபையின் உப தலைவர் எஸ். சஞ்சுதன், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மாவட்ட அமைப்பாளர் எஸ். தவபாலன் உட்பட் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் செ. மயூரன், மாநகர சபை பிரதேச சபை உறுப்பினர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டு எதிர்ப்பு தெரிவித்ததோடு குறித்த காணிக்குள் பிரவேசித்து அங்கிருந்த போலீசாரையும் அகற்றி இருந்தனர்.

இதை அடுத்து பொலிஸ் நிலையத்திற்குச் சென்று பொலிஸ் பொறுப்பதிகாரியுடனும் கலந்துரையாடி இருந்தனர்

இதன்போது பொலிஸ் பொறுப்பதிகாரி குறித்த காணியில் விகாரை அமைக்கும் திட்டம் இல்லை எனவும் தமது கட்டுப்பாட்டில் 2009 ஆம் ஆண்டிலிருந்து அக்காணி காணப்படுவதாகவும் அதனை தமது மைதான தேவைக்காகவே புனரமைப்பதாகவும் எவ்விதமான கட்டடங்களும் கட்டப்படாது எனவும் தெரிவித்ததை அடுத்து அங்கு கூடியிருந்தவர்கள் கலைந்து சென்று இருந்தனர்.

எனினும் குறித்த காணியை பொலிசார் அபகரிப்பதற்கு விட முடியாது எனவும் அவ்வாறு அபகரிக்கும் பட்சத்தில் தொடர்ந்தும் தமது போராட்டம் முன்னெடுக்கப்படும் எனவும் அங்கு குழுமியிருந்தவர்கள் தெரிவித்திருந்தனர்.

எனினும் காணிக்கு வேலி இடும் பணிகள் தொடர்ந்தும் தற்போதும் இடம்பெற்று வருகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *