தமிழ் மக்கள் சுமக்கும் வலியை என்னால் புரிந்து கொள்ள முடிகின்றது! -கனடா பிரதமர் மார்க் கார்னி

”இனப்படுகொலை காரணமாக கனடாவில் வாழும் தமிழ் மக்கள் சுமக்கும் வலியை என்னால் புரிந்துகொள்ள முடிகின்றது” என கனடா பிரதமர் மார்க் கார்னி (Mark Carney) தெரிவித்துள்ளார்.

கடந்த மாதம் கனடா வாழ் தமிழர்களுக்கும் , கனடாவின் பொதுபாதுகாப்பு அமைச்சர் கெரி ஆனந்தசங்கரிக்கும் (Gary Anandasangaree) எதிராக முன்னெடுக்கப்பட்ட இனவெறி பிரச்சாரங்களை தொடர்ந்து கனடா பிரதமர் கனடா தமிழர்களிற்கான தனது ஆதரவை வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பாக கனடிய தமிழர்களின் தேசிய அவைக்கு அவர்  அனுப்பிவைத்துள்ள  கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது

கனடாவில் வாழும் தமிழர்கள் எங்கள் நாட்டிற்கு  அளித்து வரும் பங்களிப்பிற்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அத்துடன் அவர்கள் தமது சொந்த நாட்டில் எதிர்நோக்கிய இன அழிப்பு சம்பவங்களால் அனுபவித்து வரும்  வலியினை  என்னால் நன்கு உணர்ந்து கொள்ள  முடிகின்றது.

உயிரிழந்தவர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.  குறித்த விடயத்தில்  நீதியை நிலைநாட்ட  நடைபெறும் சுயாதீனமான சர்வதேச  நடவடிக்கைகளை  கனடா அரசு தொடர்ந்து ஆதரித்து வருகின்றது. 

அந்தவகையில் அமைச்சர் ஆனந்தசங்கரி வழங்கும் பங்களிப்புகளை எங்கள் அரசு மிகவும் மதிக்கிறது. அமைச்சரவையில் அவர் வகிக்கும் பதவிக்கு எனது முழுமையான நம்பிக்கையும் உள்ளது. தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த இரண்டாவது அமைச்சராக பதவி வகிக்கின்ற அவரை பாராட்டுவதிலும் நான் பெருமை கொள்கிறேன்.

எங்கள் நாட்டில் வசிக்கும் எந்தவொரு நபரும் இனவெறுப்பு செயற்பாடுகளால் பாதிக்கப்படக் கூடாது. சமீப காலமாக அதிகரித்து வரும் இத்தகைய வெறுப்புணர்வுகளுக்கு எதிராக, கனடா அரசு ‘வெறுப்பை எதிர்க்கும் தேசியத் திட்டம்’ (Canada’s Action Plan on Combatting Hate) உள்ளிட்ட திட்டங்களை அமல்படுத்தி, பல்வேறு இலக்குகளை நோக்கி தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

எங்கள் மக்கள் கொண்டாடும் பல்வகைமையே கனடாவின் உண்மையான வலிமை. இவ்வாறான ஒற்றுமையைப் பராமரித்து, மேலும் ஒருமித்த கனடாவை உருவாக்க எங்கள் அரசு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.

உங்கள் கடிதத்திற்கு மீண்டும் நன்றி தெரிவித்துக் கொண்டு, எனது உளமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்” இவ்வாறு கனடா பிரதமர் மார்க் கார்னி (Mark Carney) தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

250707 Message from the Prime Minister of Canada

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *