ஆனையிறவு உப்பளத்தின் முன்பாகவுள்ள இலங்கை மின்சார சபைக்கு சொந்தமான மின்கம்பம் சரிந்து விழும் நிலையில் உள்ளதால் அப்பகுதியில் விபத்து ஏற்படும் அபாயம் காணப்படுவதாக A9 வீதியில் பயணிப்போர் தெரிவிக்கின்றனர்.
பாரியளவு மின் இணைப்பினை கொண்ட குறித்த மின்கம்பமானது கடந்த காலத்தில் ஏற்பட்ட காற்றின் தாக்கத்தினால் கிட்டத்தட்ட 80 வீதம் முறிந்த வண்ணம் காணப்படுகிறது.
அத்துடன் குறித்த மின் கம்பமானது இருபுறமும் உள்ள மின்கம்பத்தின் இணைப்பின் பலத்திலே கீழே விழாமல் உள்ளது எனவும், ஆனால் காற்றின் தாக்கம் அதிக அளவு காணப்பட்டால் மின்கம்பம் கீழே விழும் அபாயம் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக பாரியளவு மின் விபத்துக்கள் மற்றும் ஆனையிறவு உப்பளம் தீப்பற்றி எரியக்கூடிய அபாயம் உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அது மட்டுமன்றி A9 வீதியில் பாரியளவு வீதி விபத்துக்கள் ஏற்படும் அபாயமும் காணப்படுகின்றது. எந்நேரமும் மின்கம்பம் கீழே விழும் அபாயம் இருப்பதால் அவ்வீதி வழியாக பயணிக்கும் பயணிகள் பயத்துடனே பயணிக்க வேண்டிய நிலைமை காணப்படுகின்றது.
பலமுறை இது தொடர்பில் தெரியப்படுத்தியும் இது தொடர்பாக எந்தவித நடவடிக்கையும் இதுவரை ஆனையிறவு உப்பளத்தாலும் மற்றும் இலங்கை மின்சார சபையினாலும் எடுக்கப்படவில்லை.
இதனை இலங்கை மின்சார சபை கண்டும் காணாமலும் இருப்பதற்கான காரணமும் தெரியவரவில்லை இவ்வாறே பூநகரி பிரதான வீதியிலும் ஒரு சில மின்கம்பங்கள் சரிந்து விழும் அபாயத்தில் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் ” உரிய தரப்பினர் இது தொடர்பில் உடனடியாக அவதானம் செலுத்தி ஏற்படும் விபத்தையும் அசௌகரியத்தையும் தடுக்குமாறு ஆதவன் செய்திப் பிரிவு வேண்டுகோள் விடுக்கிறது.