வட மத்திய மாகாணத்தில் இருக்கும் ஆசிரியர், அதிபர் பிரச்சினையை அடுத்த மூன்று மாதங்களிற்குள் தீர்க்க நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் ஹரிணி அமரசூரிய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
2026 ஆம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்பட உள்ள புதிய கல்வி சீர்திருத்தம் தொடர்பாக இடம்பெற்ற கலந்துரையாடல் நிகழ்வில் பங்கேற்று நேற்று வட மத்திய மாகாண சபை கேட்போர் கூடத்தில் பிரதமர் இதனைத் தெரிவித்தார்.
இங்கு கருத்து தெரிவித்த பிரதமர்,
தற்போதுள்ள கல்வி முறை மாற்றப்பட வேண்டும் என்பதை நாம் அனைவரும் ஏற்றுக் கொள்கிறோம், அதற்காக இந்த சீர்திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும்.
குறிப்பாக தற்போது இருக்கும் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும், அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும், நிர்வாக கட்டமைப்பை வலுப்படுத்த வேண்டும், டிஜிட்டல்மயமாக்கலையும் மேற்கொள்ள வேண்டும்.
பிள்ளைகள் பாடசாலையில் இருந்து வெளியேறும் போது பல்கலைக்கழகம், உயர்கல்வி அல்லது தொழில்நுட்பக் கல்வி மூலம் முன்னேறிச் செல்ல இதன் மூலம் வழியமைக்கப்படுகிறது.
அதேபோல் இந்த செயன்முறையில் அரச சேவைக்குரிய இடமாற்றங்களை சரியான முறையில் மேற்கொள்ள வேண்டும். ஆசிரியர், அதிபர்களின் இடமாற்றங்களைச் சரியான முறையில் சமப்படுத்த வேண்டும்.
தேசிய பாடசாலைகள், மாகாண பாடசாலைகள் என பிரித்துப் பார்க்க வேண்டாம். அனைத்து பாடசாலைகளும் நமதே, நமது பிள்ளைகள் தான் இருக்கிறார்கள்.
மேலும் குறிப்பாக ,வட மத்திய மாகாணத்தில் இருக்கும் ஆசிரியர், அதிபர் பிரச்சினையை அடுத்த மூன்று மாதங்களிற்குள் தீர்க்க நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.