வவுனியாவில் உள்ள சில நடைபாதை கடைகளை அகற்ற முற்பட்ட குழுவினருக்கும் வியாபாரிகளுக்கும் இடையே வாக்குவாதம் முற்றியதை அடுத்து அங்கு பொலிஸார் மற்றும் கலகத்தடுப்பு படையினர் களமிறக்கப்பட்டுள்ளனர்.
வவுனியா இலுப்பையடி பகுதி மற்றும் வைத்தியசாலை சுற்றுவட்ட வீதியில் நீண்ட காலமாக நடைபாதை வியாபாரிகள் வியாபாரம் செய்து வந்திருந்த நிலையில் வவுனியா மாநகர சபையினால் அதனை அகற்றும் செயற்பாடு இன்று முன்னெடுக்கப்பட்டது.
போக்குவரத்துக்கு இடையூறாகவும் மக்கள் நடமாடுவதற்கு இடைஞ்சலாகவும் குறித்த நடைபாதை வியாபாரம் காணப்படுவதாக தெரிவித்து மாநகர சபையினால் இதனை அகற்றும் செயற்பாடு முன்னெடுக்கப்படுவதாக மாநகர முதல்வர் சு. காண்டீபன் தெரிவித்திருந்தார்.
இதற்கு முன்னதாக குறித்த நடைபாதை வியாபாரிகள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றில் ஈடுபட்டிருந்தபோது அங்கு வருகை தந்த மாநகர சபை உறுப்பினர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் இணைந்து நடைபாதை வியாபாரத்தை அகற்றும் செயற்பாட்டை முன்னெடுத்தனர்.
நீண்ட நேரமாக வியாபாரிகளுக்கும் பொலீசார் மற்றும் மாநகரசபை ஊழியர்களுக்கும் இடையில் தள்ளுமுள்ளு ஏற்பட்டதோடு முரண்பாடுகளும் ஏற்பட்டிருந்தது.
தமக்கான கால அவகாசம் வேண்டும் என வியாபாரிகள் கோரிக்கை விடுத்தனர்
எனினும் மாநகர சபை முதல்வர் சு. காண்டீபன் ஏற்கனவே போதுமான கால அவகாசம் வழங்கப்பட்டிருந்ததாகவும் ஏப்ரல் மாதத்தோடு இந்த வியாபார நிலையங்களை அகற்றுவதாக தெரிவித்து இருந்த போதிலும் அதனை அகற்றாமல் தற்போது இரண்டு மாதங்கள் கடந்த நிலையில் இவ்வாறான நடவடிக்கையை தாம் மேற்கொண்டு இருப்பதினால் இனி கால அவகாசம் வழங்க முடியாது என தெரிவித்திருந்தார்.
எனினும் அதன் பின்னரும் சில வியாபாரிகள் முரண்பட்டுக் கொண்டிருந்த நிலையில் பொலீசாரும் தலையிட்டு இதனை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் வியாபாரிகளை கடைகளை அகற்றுமாறு தெரிவித்திருந்தனர்.
இதனை அடுத்து வியாபாரிகள் உடன்பாட்டுக்கு வந்து வீதியோரத்தில் போடப்பட்டிருந்த தற்காலிக கொட்டகைகளை அகற்றினார்கள்.










