லொர்ட்ஸில் நடந்த மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 22 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்தியாவை தோற்கடித்தது.
இந்த வெற்றியுடன் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து 2:1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.
இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.
இதில் நடைபெற்ற முதல் 2 போட்டிகளின் முடிவில் தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் இருந்தது.
இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 3 ஆவது டெஸ்ட் போட்டி கடந்த 10 ஆம் திகதி லண்டன் லோர்ட்சில் ஆரம்பமானது.
இதில் முதல் இன்னிங்சில் இரு அணிகளும் தலா 387 ஓட்டங்களை எடுத்து சகல விக்கெட்டுகளையும் இழந்தது.
இரண்டாவது இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி இந்திய பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 62.1 ஓவர்களில் 192 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது.
அதிகபட்சமாக ஜோ ரூட் 40 ஓட்டங்களை எடுத்தார்.
இந்தியா தரப்பில் வொஷிங்டன் சுந்தர் 4 விக்கெட்டுகளையும் பும்ரா, மற்றும் மொஹமட் சிராஜ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இதன் மூலம் இந்தியாவுக்கு 193 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
பின்னர் இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணி 4 ஆவது நாள் முடிவில் 17.4 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 58 ஓட்டங்களை எடுத்திருந்தது.
கே.எல். ராகுல் 33 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இந்தியாவின் வெற்றிக்கு 135 ஓட்டம் தேவை.
அதே சமயம் இங்கிலாந்து வெற்றிக்கு 6 விக்கெட் தேவை என்ற பரபரப்பான சூழலில் 5 ஆவதும் இறுதியுமான நாள் ஆட்டம் திங்கட்கிழமை (14) தொடங்கியது.
ரிஷப் பண்ட் – கே.எல்.ராகுல் துடுப்பாடத்தை தொடங்கினர்.
ஆட்டம் ஆரம்பித்த சிறிது நேரத்திலேயே இந்திய அணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
ரிஷப் பண்ட் 9 ஓட்டங்களில் ஆர்ச்சர் பந்துவீச்சில் போல்டானார்.
அடுத்து ஜடேஜா களமிறங்கினார்.
நிதானமாக ஆடிய கே.எல்.ராகுல் 39 ஓட்டங்களில் ஸ்டோக்ஸ் பந்துவீச்சில் வீழ்ந்தார்.
பின்னர் வந்த வொஷிங்டன் சுந்தர் டக் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார்.
இவர்கள் ஆட்டமிழந்ததும் இங்கிலாந்து அணி எளிதில் வெற்றி பெறும் என்று அனைவரும் நினைத்தனர்.
ஆனால், பின்வரிசை வீரர்களின் கணிசமான ஒத்துழைப்புடன் ஜடேஜா தனி ஆளாக போராடி அணிக்கு நம்பிக்கை அளித்தார்.
அடுத்து களமிறங்கிய நிதிஷ் ரெட்டி ஜடேஜாவுக்கு ஒத்துழைப்பு கொடுத்தார்.
இங்கிலாந்து பந்துவீச்சை ஒரளவு தாக்குப்பிடித்து விளையாடிய இந்த ஜோடி 30 ஓட்டங்கள் இணைப்பாட்டம் அமைத்த நிலையில் பிரிந்தது.
நிதிஷ் ரெட்டி 13 ஓட்டங்களில் உணவு இடைவேளைக்கு முந்தைய ஓவரில் ஆட்டமிழந்தார்.
அடுத்து ஜடேஜா உடன் பும்ரா கைகோர்த்தார்.
இருவரும் இணைந்து போட்டியை சமன் செய்யும் நோக்குடன் விளையாடினர்.
அதிக டொட் பந்துகளை எதிர்கொண்ட இந்த ஜோடியை பிரிக்க இங்கிலாந்து பந்துவீச்சாளர்கள் கடும் சிரமத்தை சந்தித்தனர்.
20 ஓவர்களுக்கு மேல் தாக்குப்பிடித்து விளையாடிய இந்த ஜோடியை இறுதியில் பென் ஸ்டோக்ஸ் பிரித்தார்.
அவரது பந்துவீச்சில் ஜஸ்பிரித் பும்ரா 5 ஓட்டங்களில் (54 பந்துகள்) ஆட்டமிழந்தார்.
இறுதி விக்கெட்டுக்கு களமிறங்கிய மொஹம் சிராஜும் ஜஸ்பிரித் பும்ரா செய்த வேலையை அப்படியே செய்தார்.
பெரும்பாலும் ஸ்ட்ரைக்கை தன்வசம் வைத்து ஜடேஜா போராடினார்.
அவரை கட்டுப்படுத்த முடியாமல் இங்கிலாந்து பந்து வீச்சாளர்கள் திணறினார்.
இதனால் ஆட்டம் பரபரப்பாகவே நகர்ந்தது.
முடிவில் சோயிப் பஷீர் இந்தியாவின் கடைசி விக்கெட்டை வீழ்த்தி பரபரப்புக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
அவரது பந்துவீச்சில் சிராஜ் போல்டானார்.
இதனால் ஜடேஜாவின் போராட்டம் வீண் ஆனது.
2 ஆவது இன்னிங்சில் 74.5 ஓவர்கள் தாக்குப்பிடித்த இந்திய அணி 170 ஓட்டங்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்தது.
இதன் மூலம் இங்கிலாந்து 22 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
தனி ஆளாக போராடிய ஜடேஜா 61 ஓட்டங்களுடன் இறுதிவரை களத்தில் இருந்தார்.
இங்கிலாந்து தரப்பில் ஆர்ச்சர், ஸ்டோக்ஸ் தலா 3 விக்கெட்டுகளும், பிரைடன் கார்ஸ் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.
போட்டியின் ஆட்டநாயகனாக இங்கிலாந்து அணித் தலைவர் பென்ஸ்டோக்ஸ் தெரிவானார்.
4 ஆவது போட்டி 23 ஆம் திகதி மான்செஸ்டரில் நடைபெற உள்ளது.