ஃபௌஜா சிங் உயிரிழப்பு விவகாரம்; வெளிநாட்டு வாழ் இந்தியர் கைது!

புகழ்பெற்ற மரதன் ஓட்டப்பந்தய வீரர் ஃபௌஜா சிங்கின் மரணத்துக்கு வழிவகுத்த விபத்து தொடர்பாக 30 வயதுடைய வெளிநாட்டு வாழ் இந்தியர் பஞ்சாப் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

114 வயது தடகள வீரரின் உயிரைப் பறித்த சம்பவம் நடந்த 30 மணி நேரத்திற்குள் அமிர்த்பால் சிங் தில்லான் என்ற சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.

அதேநேரம் விபத்தை ஏற்படுத்திய அவரத சொகுசு வாகனமும் பொலிஸாரினால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

ஜலந்தரின் கர்தார்பூரில் உள்ள தாசுபூர் கிராமத்தைச் சேர்ந்த தில்லான், நேற்றிரவு இரவு கைது செய்யப்பட்டு, தற்போது போக்பூர் பொலிஸ் நிலையத்தில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறார்.

அவரை இன்று (16) நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கையினையும் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

தில்லான், கனடாவில் தனது குடும்பத்துடன் வசித்து வந்ததுடன், ஒரு வாரத்துக்கு முன்னர் அவர் இந்தியா திரும்பியுள்ளதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

யார் ஃபௌஜா சிங்?

1911 ஏப்ரல் 1 அன்று ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்த ஃபௌஜா சிங், 1990களின் முற்பகுதியில் தனது மனைவியின் மரணத்திற்குப் பின்னர் இங்கிலாந்துக்குச் சென்றார்.

1994 ஆம் ஆண்டு தனது மகன் இறந்த பின்னர் அவர் ஓட்டப் பந்தயத்தைத் தொடங்கினார்.

2000 ஆம் ஆண்டில், தனது 89 வயதில், புகழ்பெற்ற லண்டன் மரதனில் அறிமுகமானார்.

பின்னர் டொராண்டோ, நியூயார்க் மற்றும் பிற நகரங்களில் மரதன் ஓட்டப் போட்டிகளில் பங்கேற்றார்.

2011 ஆம் ஆண்டு டொராண்டோவில் தனது 100 வயதில் முழு மரதன் ஓட்டத்தில் ஓடிய வயதான மனிதர் என்ற பெருமையைப் பெற்றார்.

2004 ஏதென்ஸ் விளையாட்டுப் போட்டிகள் மற்றும் 2012 லண்டன் ஒலிம்பிக்கிற்கு சடர் ஏந்திய ஃபௌஜா சிங், 2013 ஆம் ஆண்டு தனது 101 வயதில் தனது கடைசி போட்டிப் பந்தயத்தை ஓடி, ஹொங்கொங் மரதனின் 10 கிலோமீட்டர் ஓட்டத்தை 1 மணி நேரம், 32 நிமிடங்கள், 28 வினாடிகளில் முடித்தார்.

இந்த நிலையில் ஃபௌஜா சிங்கின் உயிரிழப்புக்கு இரங்கல் தெரிவித்துள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, அவரது தனித்துவமான ஆளுமைக்காக அவரை அசாதாரணமானவர் என்று வர்ணித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *