“செம்மணி புதைக்குழி விவகாரம் அநுர அரசுக்கு ஒரு அக்னிப் பரீட்சை ஆகும்” என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
செம்மணி படுகொலைக்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பு புகையிரத நிலையத்திற்கு முன்பாக நீதிக்கான மக்கள் சக்தி அமைப்பினரால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு தனது ஆதரவினை தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மனோ கணேசன் மேலும் தெரிவித்துள்ளதாவது” ” இன்று, இலங்கையர் அரசு என கூறி, ஆட்சிக்கு வந்திருக்கும் அநுர அரசுக்கு அக்னி பரீட்சை. இதை கடந்து தம்மை நிரூபிக்க வேண்டிய கடப்பாடு இந்த நாட்டின் தலைவருக்கு இருக்கிறது.
இது மட்டுமல்ல, தெற்கிலும் பல புதை குழிகள் இருப்பதாக ஆதாரங்கள் ஆங்காங்கே வெளிபட்டுள்ளன. அவற்றையும் ஆய்வு செய்து நீதியை நிலை நாட்டுங்கள்.
எங்களது நல்லாட்சியில் பல்வேறு காரியங்களை நாமும், வடகிழக்கு தமிழ் கட்சிகளும் நிர்ப்பந்தம் செய்து ஆரம்பித்தோம்.
ஐநா சபைக்கு கொண்டு போனோம். தீர்மானங்கள் நிறைவேற்றினோம். அரசியல் கைதிகளை கணிசமாக விடுவித்தோம். காணிகள் கணிசமாக விடுவித்தோம். காணாமல் போனோர் அலுவலகம், நஷ்ட ஈட்டு அலுவலகம், ஆகியவற்றை அமைத்தோம். யுத்த அவலத்துக்கு மூல காரணமான தேசிய இனப் பிரச்சினைக்கு “அதிகாரபகிர்வு” தீர்வை தேடி, புதிய அரசியலமைப்பு பணியை செய்தோம்.
அனைத்தையும் நான்கு ஆண்டுகளில் செய்து முடிக்க முடியவில்லை. முடியாது. ஆனால் நாம் நல்ல ஆரம்பத்தை தந்தோம்.
நாம் ஆரம்பித்த இந்த பணிகளை அப்படியே முன்னே கொண்டு செல்ல வேண்டியதே இந்த அரசின் கடமை. முதலிப் காணாமல் போனோர் அலுவலக அதிகாரிகளை அங்கே அனுப்புங்கள். அதை செய்யுங்கள் என நான் அநுர குமார திசாநாயக்கவை நான் கோருகிறேன்” இவ்வாறு மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.