
வாழைச்சேனை பகுதியில் இருந்து குருணாகலுக்கு கனரக வாகனத்தில் சட்டவிரோதமாக 410 மூடை சிப்பியை கடத்தி செல்ல முயன்ற மூன்று பேரை இன்று (17) சனிக்கிழமை அதிகாலை கைதுசெய்துள்ளதாக மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொறுப்பதிகாரி பி.எஸ்.பி. பண்டார தெரிவித்தார்.
வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள கொழும்பு – திருகோணமலை பிரதான வீதிசந்தியான நாவலடிச் சந்தியில் சம்பவதினமான இன்று அதிகாலை 03.00 மணியளவில் வீதிச்சோதனை நடவடிக்கையில் மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவினர் பொறுப்பதிகாரி பி.எஸ்.பி. பண்டார தலைமையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
இதன்போது வாழைச்சேனையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த கனரக ரக வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டனர்.
அதில் சட்டவிரோதமாக தலா 50 கிலோ கொண்ட 410 மூடை சிப்பிகளை குருணாகலுக்கு கடத்திச் செல்வதை கண்டறிந்தனர்.
இந்நிலையில், கடத்திச் சென்ற 3 பேரை கைது செய்ததுடன் சிப்பியுடன் கனரக வாகனத்தை மீட்டு வாழைச்சேனை பொலிசாரிடம் ஒப்படைத்தனர்.
கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.