பாரம்பரிய கல்வி முறையில் தொழிற்கல்விக்கு முக்கியத்துவம்! கல்வியமைச்சர் தெரிவிப்பு

பாரம்பரிய கல்வியைப் போன்றே தொழிற்கல்விக்கும் அரசாங்கம் சமமான முக்கியத்துவத்தை வழங்கி வருவதாக கல்வியமைச்சர் பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.

பாரம்பரிய கல்வியை மேம்படுத்தும் அதேவேளை திறன் அபிவிருத்தி தொடர்பில் அரசாங்கம் உயர்மட்ட கவனத்தை செலுத்தி வருவதாக கல்வியமைச்சர் தெரிவித்துள்ளார்.

பாரம்பரிய பல்கலைக்கழகங்களை மேம்படுத்தும் அதேவேளை தொழிற்கல்விக்கு முக்கியத்தும் கொடுத்து எதிர்காலத்தை எதிர்கொள்ளும் விடயத்தில் தற்போதைய அரசாங்கம் முக்கியத்துவம் வழங்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

தொழிற் கல்வியை இரண்டாம் பட்சமாக பார்க்காது அனைவரதும் எதிர்காலமாக கருதி கவனம் செலுத்தப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் அவர் தெரிவித்ததாவது,

எமது நாட்டிலுள்ள முக்கிய நிறுவனங்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு முக்கிய காரணம் பயிற்சி பெற்ற ஆளணியினர் இல்லாமையே. அவ்வாறு பயிற்சி பெற்றவர்கள் இருப்பார்களானால் தற்போது நடைமுறையிலுள்ள செயற்திட்டங்களை மூன்று மடங்காக அதிகரிக்க முடியும். அவ்வாறானவர்களை உருவாக்குவதற்கு திறன் அபிவிருத்தி அத்தியாவசியமானதாகும்.

இதற்காக கல்வியமைச்சோடு இணைந்ததாக இராஜாங்க அமைச்சை உருவாக்குவதற்கு ஜனாதிபதி நடவடிக்கை எடுத்தார். அதற்கான இராஜாங்க அமைச்சர் பதினொரு மாதங்கள் தொழிற்கல்வி துறையில் குறிப்பிடக் கூடிய மாற்றங்களை ஏற்படுத்தி வருகின்றார்.

இதற்கிணங்க மிக குறுகிய காலத்தில் தொழிற்கல்வி துறையில் மிகப்பெரிய முன்னேற்றம் ஏற்படுவதை நாம் பார்க்கலாம் என்றும் கல்வியமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *