இந்த ஆண்டில் இதுவரையில், ஊழல் தடுப்பு நடவடிக்கையின்கீழ், 300க்கும் அதிகமான காவல்துறை அதிகாரிகள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.
2024 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது இந்த எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கையூட்டல், போதைப்பொருள் குற்றச்சாட்டுகளை உருவாக்கியமை மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் தொடர்புகளைப் பேணியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளில் இவர்களுக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
குறிப்பிடத்தக்க வகையில், ஒக்கம்பிட்டிய மற்றும் பூவரசங்குளம் காவல் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள் கையூட்டல் வாங்கியதற்காக கைது செய்யப்பட்டனர்.
அதே நேரத்தில் ராகமவில் சில அதிகாரிகள் போலி போதைப்பொருள் வழக்கில் பணம் கோரியமைக்காக கைதுசெய்யப்பட்டனர்.
ஏனையோர் சிறிய கையூட்டல், பொதுமக்களைத் தாக்குதல் மற்றும் போதைப்பொருள் பாவனை ஆகியன தொடர்பில் இடைநீக்கம் செய்யப்பட்டனர். கையூட்டல் ஒழிப்பு ஆணைக்குழு, இந்த ஆண்டு இதுவரையில் 10 காவல்துறை அதிகாரிகளை கைது செய்துள்ளது.
மேலும் காவல்துறையினரின் தவறான நடத்தை தொடர்பான சுமார் 2000க்கும் மேற்பட்ட வழக்குகள் தொடர்பில் விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
பொதுமக்களின் நம்பிக்கையை மீட்டெடுப்பதில் அரசாங்கம் உறுதியாக இருப்பதாகவும், எந்தவொரு அதிகாரிக்கும் எதிராக, அவர்களின் பதவியைப் பொருட்படுத்தாமல், நடவடிக்கை எடுக்கும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
பல உயர் சட்ட அமுலாக்க அதிகாரிகள் தற்போது விசாரணையில் உள்ளனர் அல்லது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
தனிப்பட்ட லாபத்திற்காக பொது சேவை தவறாகப் பயன்படுத்தப்படாமல் இருப்பதை நாம் உறுதி செய்ய வேண்டும் எனவும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்..