திருகோணமலை-மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையில் கடமையாற்றிவரும் அம்பியுலன்ஸ் சாரதியொருவர் தன்னுடைய கடமைக்கு மேலதிகமாக தொற்று நீக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டு வருவது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையில் அம்பியுலன்ஸ் சாரதியாக கடமையாற்றி வரும் ஏ.ஜீ.எல்.சமிந்த நாட்டில் ஏற்பட்டுள்ள கோவிட்-19 தொற்றினால் அதிகளவில் மக்கள் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் தமது பிரதேசத்தில் பொது மக்கள் அதிகமாக நடமாடும் பகுதிகளுக்குச் சென்று தொற்று நீக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டு வருகின்றார்.
நோயாளர்களின் வீதம் அதிகரித்து வரும் நிலையில் இரவு பகலாக தன்னுடைய கடமையைச் செய்துவிட்டு தன்னுடைய பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொண்டு மற்றவர்களும் தொற்று ஏற்படாத விதத்தில் தொற்று நீக்கம் செய்ய வேண்டும் என்ற நல்ல நோக்குடன் இவ்வாறான செயற்பாட்டில் ஈடுபட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையின் வைத்திய பொறுப்பதிகாரி எரங்க குணசேகர அவர்களின் ஆலோசனையின் பேரில் தன்னுடைய சொந்த பணத்தில் குளோரினை பெற்று தொற்றுநீக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாகவும் தெரியவருகின்றது.
இவரைப் போன்று மற்றவர்களும் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது





