முல்லைத்தீவில் கொரோனா சடலங்களை தகனம் செய்ய இடம் தெரிவு

முல்லைத்தீவு மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழப்பவர்களின் சடலங்களை தகனம் செய்வதற்கான இடம் ஒன்று நேற்றைய தினம் தெரிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் இச் சடலங்களை தகனம் செய்வதற்கான ஒரு இடம் அமைய வேண்டுமென்ற மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதனின் திட்டமிடலின் கீழ் அவரது தலைமையில் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் ம.உமாமகள், கரைதுறைப்பற்று பிரதேச சபை தவிசாளர் க.விஜிந்தன், பிராந்திய சுகாதார பணிமனை வைத்திய அதிகாரிகள், வன வளத்திணைக்கள அதிகாரிகள் ஆகியோர் முதற்கட்டமாக கூட்டு கள ஆய்வினை மேற்கொண்டு இடத்தினை அடையாளப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

அத்தோடு கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை தொடர்ச்சியாக அதிகரித்து செல்லும் நிலையில் வவுனியாவில் உள்ள எரிவாயு தகனமேடை பழுதடைந்து காணப்படுவதால் முல்லைத்தீவு மாவட்டத்தில் உயிரிழந்தவர்களின் சடலங்கள் மாவட்ட மருத்துவமனை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளன.

மேலும் தண்ணீரூற்று நெடுங்கேணி வீதியில் கயட்டை காட்டிற்கருகில் வனவளத்திணைக்களத்திற்கு சொந்தமான காட்டுப்பகுதியில் 06 ஏக்கர் காணியை ஒதுக்கீடு செய்வதாகவும் முதற்கட்டமாக ஒன்றரை ஏக்கர் வன வளத்திணைக்களத்திடமிருந்து விடுவித்து தருவதாக வனவளத்திணைக்கள அதிகாரிகள் இணக்கம் தெரிவித்துள்ளனர்.

மேலும் குறித்த பகுதிக்கு அருகில் மின்சார வசதி உள்ளமையினால் சடலங்களை தகனம் செய்வதற்கு ஏற்றவகையில் மின்சார எரிவாயு தகனமேடை அமைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *