நாட்டின் சொத்துக்களான சிறுவர்களை தவறாக வழிநடத்துவதற்கான சூழலை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் உருவாக்கிக் கொண்டிருக்கிறது என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன தெரிவித்தார்.
கொழும்பிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தி அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
சபைமுதல்வரும் அமைச்சருமான பிமல் ரத்நாயக்க 16 வயது பூர்த்தியடைந்த சிறுவர்கள் பாலியல் உறவில் ஈடுபட முடியும் என பாராளுமன்றத்தில் கூறுகின்றார்.
இந்நாட்டில் சிகரட் கொள்வனவு செய்வதற்கு 21 வயதுக்கு மேற்பட்டவர்களாக இருக்க வேண்டும் என்பது சட்டமாகும். இவ்வாறான நாட்டில் 16 வயதுடையோருக்கு இதுபோன்ற சுதந்திரம் வழங்கப்பட்டால் 2500 ஆண்டுகள் பழமையான பௌத்த தேரவாதத்தை பின்பற்றும் தாய்நாட்டின் ஒழுக்கத்துக்கு என்னவாகும்?
பௌத்தம் மாத்திரமின்றி ஏனைய அனைத்து மதங்களும் சிறுவர்களுக்கு கற்றுக் கொடுக்கும் ஒழுக்கத்தை சீரழிக்கும் வகையிலேயே சபை முதல்வரின் கருத்து அமைந்துள்ளது.
16 வயது சிறுமியொருவர் கர்ப்பம் தரித்தால் அந்த சிறுமிக்கு அமைச்சர் பிமல் ரத்நாயக்க வழங்கும் பதில் என்ன? கடந்த வாரத்தில் இருவேறு பிரதேசங்களில் பிறந்த சிசுக்கள் வீதியிலிருந்து கண்டெடுக்கப்பட்டன. இவ்வாறான திருமணத்துக்கு முன்னதான பாலியல் உறவுகளால் எயிட்ஸ் உள்ளிட்ட நோய்கள் அதிகரிக்கும் அபாயம் காணப்படுகிறது.
கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இவ்வாண்டு எயிட்ஸ் நோயாளர்களின் எண்ணிக்கை 17 சதவீதத்தால் அதிகரித்துள்ளது.
இவ்வாறிருக்க தன்பாலீர்ப்பினரை அடிப்படையாகக் கொண்ட சுற்றுலாத்துறை மேம்படுத்தும் முயற்சிகளையும் முன்னெடுத்துக் கொண்டிருக்கின்றனர்.
ஜனாதிபதியும், வெளிவிவகார அமைச்சரும் தான் இதனை அனுமதிக்கவில்லை எனக் கூறினாலும், சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையில் இது குறித்த கடிதத்தை அனுப்பியவர்களுக்கு எதிராக இதுவரையில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
குறித்த கடிதம் இன்றுவரை மீளப் பெறப்படவும் இல்லை என தெரிவித்தார்.




