அம்பாந்தோட்டை – ஹங்கம வடிகல பகுதியிலுள்ள வீடொன்றில் இடம்பெற்ற இரட்டைக் கொலை சம்பவம் தொடர்பில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த கொடூர கொலை சம்பவம், ஹுங்கம வாடிகல பகுதியில் உள்ள நண்பர் ஒருவரின் வீட்டில் தங்கியிருந்த போது நேற்று அதிகாலை 12.45 மணியளவில் முகமூடி அணிந்த குழுவால் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
உயிரிழந்த தம்பதியினர் முதலில் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு பின்னர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியமை தெரிய வந்துள்ளது.
உயிரிழந்த பெண்ணின் உடலிலிருந்து தோட்டா கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர்கள் திஸ்ஸமஹாராம பகுதியைச் சேர்ந்த 28 வயதான பசிந்து ஹெஷான் என்பவரும் 28 வயதான இமேஷா மதுபாஷினி எனவும் தெரிய வந்துள்ளது.
இந்நிலையில் குறித்த இரட்டைக் கொலை தொடர்பாக பிரதான சந்தேக நபர் மற்றும் வீட்டின் உரிமையாளர் உட்பட ஐவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதுபெலேன பிந்து என அழைக்கப்படும் பிரதான சந்தேக நபரும், மேலும் பெண் உட்பட நான்கு சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் சம்பவத்தின் போது வீட்டின் உரிமையாளரான நண்பனும் அங்கு இருந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த குற்றத்தில் தொடர்புடைய மற்ற சந்தேக நபர்களைக் கைது செய்ய மேலும் விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.
இதற்கு முன்பும் அவரைக் கொல்ல முயற்சி நடந்துள்ளதாகவும், அவர் பலத்த காயங்களுடன் உயிர் பிழைத்ததாகவும், உயிர் பயத்தில் அவர் வாழ்ந்து வந்ததாகவும் பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும் குற்றத்தில் பயன்படுத்தப்பட்ட 12 ரக உள்நாட்டுத் துப்பாக்கி, 02 கத்திகள், 12 ரக வெடிமருந்துகள் மற்றும் 12 ரக வெற்று வெடிமருந்துகள் என்பவற்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
இதுவரை மேற்கொள்ளப்பட்ட பொலிஸ் விசாரணைகளில், போதைப்பொருள் தொடர்பான தகராறு மற்றும் திருமணத்திற்கு புறம்பான உறவு ஆகியவையே இந்தக் கொலைகளுக்கு காரணங்கள் என்பது தெரியவந்துள்ளது.
இதேவேளை உயரிழந்தவர், 2024 மார்ச் மாதத்தில் கஹந்தமோதரவில் படகு ஓட்டுநர் ஒருவரைச் சுட்டுக்கொன்ற சம்பவத்தில் சந்தேக நபராக பெயரிடப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், இந்த சம்பவம் குறித்து ஹுங்காம பொலிஸார் மற்றும் தங்காலை பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவு இணைந்து விரிவான விசாரணையை மேற்கொண்டு வருகின்றன.




