பொலன்னறுவை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வந்த காற்றுடன் கூடிய கடும் மழை காரணமாக 60க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளதாக பொலன்னறுவை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
காற்றுடன் கூடிய கடும் மழை காரணமாக பொலன்னறுவை மாவட்டத்தில் உள்ள 57 வீடுகள் சிறிதளவு சேதமடைந்துள்ள நிலையில் மீதமுள்ள 3 வீடுகளும் முழுவதுமாக சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனால், திம்புலாகல பிரதேச செயலகப் பிரிவுக்கு உட்பட்ட 9 வீடுகளும், தமன்கடுவ பிரதேச செயலகப் பிரிவுக்கு உட்பட்ட 8 வீடுகளும், ஹிங்குரக்கொட பிரதேச செயலகப் பிரிவுக்கு உட்பட்ட 13 வீடுகளும் , லங்காபுர பிரதேச செயலகப் பிரிவுக்கு உட்பட்ட 6 வீடுகளும்,
வெலிகந்த பிரதேச செயலகப் பிரிவுக்கு உட்பட்ட 5 வீடுகளும் , மெதிரிகிரிய பிரதேச செயலகப் பிரிவுக்கு உட்பட்ட 9 வீடுகளும், எலஹெர பிரதேச செயலகப் பிரிவுக்கு உட்பட்ட 2 வீடுகளும் சேதமடைந்துள்ளன.
பாதிக்கப்பட்ட பிரதேசவாசிகளுக்கு தேவையான உதவிகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டதாக பொலன்னறுவை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் அதிகாரி உபுல் குமார தெரிவித்தார்.
இந்நிலையில் கிழக்கு, ஊவா, மத்திய மாகாணங்களுக்கும் பொலன்னறுவை மாவட்டத்துக்கும் இடி மற்றும் மின்னல் தாக்கம் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதன்படி, இந்த எச்சரிக்கை இன்று இரவு 11.00 மணி வரை அமுலில் இருக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கிழக்கு, ஊவா, மத்திய மாகாணங்களிலும் பொலன்னறுவை மாவட்டத்திலும் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும்.
மின்னல் தாக்கத்தால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்க போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.





